“உலகையே கீழடி, வியப்பில் ஆழ்த்திவிட்டது”-7-ம் கட்ட அகழாய்வு பணிகளை பார்வையிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்


“உலகையே கீழடி, வியப்பில் ஆழ்த்திவிட்டது”-7-ம் கட்ட அகழாய்வு பணிகளை பார்வையிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
x
தினத்தந்தி 13 Jun 2021 12:14 AM IST (Updated: 13 Jun 2021 12:14 AM IST)
t-max-icont-min-icon

உலகையே கீழடி வியப்பில் ஆழ்த்திவிட்டது என அங்கு நடைபெறும் 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை பார்வையிட்டபின்பு, அமைச்சர் தங்கம்தென்னரசு கூறினார்.

திருப்புவனம்,

உலகையே கீழடி வியப்பில் ஆழ்த்திவிட்டது என அங்கு நடைபெறும் 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை பார்வையிட்டபின்பு, அமைச்சர் தங்கம்தென்னரசு கூறினார்.

கீழடி அகழாய்வு
பண்டைய காலம் தொட்டே தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை கீழடி, ஆதிச்சநல்லூர் பகுதிகளில் நடந்த அகழாய்வு தெளிவுப்படுத்துகின்றன.சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொல்லியல்துறை மூலம் நடைபெற்று வருகிறது. கொரோனா 2-வது அலை பரவலால் சில வாரங்கள் நிறுத்தப்பட்ட அகழாய்வு, கடந்த 8-ந்தேதி முதல் மீண்டும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று காலை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர். அப்போது, மதுரை தொகுதி எம்.பி. வெங்கடேசன், சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மானாமதுரை ெதாகுதி எம்.எல்.ஏ. தமிழரசி ஆகியோரும் வந்திருந்தனர். அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

வியப்பில் ஆழ்த்திவிட்டது

 வைகை நதி நாகரிகம் தமிழ் சமுதாயத்தின் தாய்மடி ஆகும். வைகை சமவெளியான கீழடியில் கண்டறியப்பட்ட பண்டைய கால மக்களின் வரலாற்று சின்னங்கள் உலகையே வியப்பில் ஆழ்த்திவிட்டது.
அந்த சான்றுகள் தமிழனை தலை நிமிர வைத்துள்ளன. 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் நாகரிகத்தை அறியும் வண்ணம் எழுத்து வடிவிலான சுவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
கீழடியில் தற்போது நடைபெறும் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தங்கத்தினாலான அரிய வகை தண்டட்டி, குறுவாள் மற்றும் 13 வகை எழுத்துக்கள் அடங்கிய மண்பானையிலான சுவடிகள், புதிய கற்கால கருவிகள் என பல்வேறு வகையான பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 700-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.
அருங்காட்சியகம் அமைக்கப்படும்
இதுபோல் கீழடியை சுற்றி கொந்தகை, அகரம், மணலூர் போன்ற பகுதிகளில் தொல்லியல் துறையின் மூலம் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பழமைவாய்ந்த சங்ககால பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த அரியவகை பொருட்களை தமிழறிஞர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவியர்கள் என அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி

 பின்னர் கொந்தகை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கட்டப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகத்தை அமைச்சர்கள் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கீழடி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை அமைச்சர்கள் வழங்கினார்கள். பின்பு கீழடி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர்.
அப்போது மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம், பால் கூட்டுறவு சங்க தலைவர் சேங்கைமாறன், தாசில்தார் ரத்தினவேல் பாண்டியன், மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு, மண்டல துணை தாசில்தார் தர்மராஜ், யூனியன் ஆணையாளர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் லெட்சுமணராஜ், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story