14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி மும்முரம்
விழுப்புரம் மாவட்டத்தில் 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சுமையை கருத்தில் கொண்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ கோதுமை மாவு, 1 கிலோ உப்பு, 1 கிலோ ரவை, அரை கிலோ சர்க்கரை, அரை கிலோ உளுந்தம்பருப்பு, கால் கிலோ புளி, கால் கிலோ கடலை பருப்பு, 200 கிராம் டீ தூள், 100 கிராம் கடுகு, 100 கிராம் சீரகம், 100 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் மிளகாய் தூள், 1 குளியல் சோப் (125 கிராம்), 1 துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்) ஆகிய 14 வகை பொருட்கள் அடங்கிய கொரோனா சிறப்பு நிவாரண பொருட்களை வழங்க அரசு திட்டமிட்டது.
அதன்படி சென்னையில் கடந்த 3-ந் தேதியன்று இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக மற்ற மாவட்டங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் ரேஷன் கடைகள் மூலம் இந்த பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
5,93,363 பேருக்கு...
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,254 ரேஷன் கடைகள் மூலம் அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள் 5 லட்சத்து 93 ஆயிரத்து 363 பேருக்கு 14 வகையான பொருட்கள் அடங்கிய கொரோனா சிறப்பு நிவாரண தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதையொட்டி இந்த பொருட்களை சென்னையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு, அவை விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு வந்திறங்கியது.
ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி
இந்த பொருட்கள் அனைத்தும் விழுப்புரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோனில் இருந்து அந்தந்த ரேஷன் கடைகளுக்கு சரக்கு வாகனம், மினி லாரி, லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக அனுப்பும் பணிகள் நேற்று முதல் மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணியை மாவட்ட வழங்கல் அலுவலர் அறிவுடைநம்பி, பறக்கும் படை தனி தாசில்தார் வேல்முருகன், குடிமைப்பொருள் தனி தாசில்தார் கோவிந்தராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 14 வகை பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நாளை (அதாவது இன்று) முடியும். அதன் பிறகு ரேஷன் கடை ஊழியர்கள், அந்த பொருட்களை ஒரே தொகுப்பாக ஒரு பையில் போட்டு அதனை அரிசி பெறும் அட்டைதாரர்களுக்கு வழங்குவார்கள் என்றனர்.
Related Tags :
Next Story