கொரோனா ஊரடங்கால் இயங்காத கைத்தறிகள்; பல லட்சம் ரூபாய் பட்டு சேலைகள் தேக்கம்


கொரோனா ஊரடங்கால் இயங்காத கைத்தறிகள்; பல லட்சம் ரூபாய் பட்டு சேலைகள் தேக்கம்
x
தினத்தந்தி 13 Jun 2021 12:37 AM IST (Updated: 13 Jun 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கால் மூலப்பொருட்கள் கிடைக்காததால் கைத்தறிகள் இயங்கவில்லை. இதனால் வீரவநல்லூர் பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன.

சேரன்மாதேவி:
கொரோனா ஊரடங்கால் மூலப்பொருட்கள் கிடைக்காததால் கைத்தறிகள் இயங்கவில்லை. இதனால் வீரவநல்லூர் பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன. எனவே அவற்றை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கைத்தறி நெசவு தொழில்

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக நெசவு  தொழிலில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நாகரிக மாற்றத்தின் காரணமாக, விசைத்தறிகளின் மூலம் ஆடைகள் நெய்யப்பட்டாலும், கைத்தறிகளின் மூலம் நெய்யப்படும் பாரம்பரிய ஆடைகளை அனைவரும் விரும்பி அணிகின்றனர். இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர், தெற்கு வீரவநல்லூர், புதுக்குடி, வெள்ளாங்குளி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி நெசவுத்தொழில் சிறந்து விளங்குகிறது. இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட கைத்தறிக்கூடங்களில் ஏராளமான நெசவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் பெரும்பாலானவர்கள் தங்களது வீடுகளிலேயே கைத்தறிக்கூடங்களை அமைத்து பட்டு நெசவுத்தொழில் செய்து வருகின்றனர்.

வறுமையில் வாடும் நெசவாளர்கள்

வீரவநல்லூர் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டு நெசவு துணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. கைத்தறி மூலம் பட்டு சேலை தயாரிக்க சுமார் 15 நாட்கள் ஆகிறது. அதிலும் பல்வேறு வண்ண டிசைன்களில் பட்டு சேலை தயாரிக்க கூடுதல் நாட்களாகிறது.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் ஜவுளிக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் போதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெறாததால், உற்பத்தி செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன.
மேலும் பாவு நூல் போன்ற மூலப்பொருட்களும் கிடைக்கப் பெறாததால், புதிய கைத்தறி துணிகளை தயாரிக்க முடியவில்லை. இதனால் கைத்தறி நெசவாளர்கள் வறுமையில் வாடுகின்றனர்.

இதுகுறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது:-

பட்டு சேலைகள் தேக்கம்

வீரவநல்லூர், புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பல தலைமறைகளாக கைத்தறி நெசவு தொழில் செய்து வருகிறோம். மாதம் முழுவதும் கைத்தறியில் கடினமாக உழைத்தாலும் ஓரிரு பட்டு சேலைகளையே தயாரித்து விற்பனை செய்து வந்தோம்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, ஜவுளிக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால், உற்பத்தி செய்யப்பட்ட பட்டு சேலைகளை கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன.

எனவே கைத்தறி நெசவாளர்களுக்கு போதிய நிவாரண உதவி வழங்க வேண்டும். நாங்கள் வங்கிகளிலும், மகளிர் சுய உதவிக்குழுக்களிலும் பெற்ற கடன்களை அபராத வட்டியின்றி திருப்பி செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். நாங்கள் உற்பத்தி செய்த பட்டு சேலைகளை அரசு கொள்முதல் செய்து, கோ-ஆப்டெக்ஸ் போன்றவற்றில் விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story