மொபட் மீது லாரி மோதி சமையல்காரர் பலி
தா.பழூர் அருகே மொபட் மீது லாரி மோதி சமையல்காரர் பரிதாபமாக இறந்தார்.
தா.பழூர்:
சமையல்காரர் சாவு
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த உதயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி(வயது 55). சமையல் வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை தா.பழூர் அருகே உள்ள இருகையூர் கிராமத்திற்கு வேலை நிமித்தமாக சென்றுவிட்டு, பின்னர் தனது மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தா.பழூர்- விளாங்குடி சாலையில் தா.பழூர் செல்லும் வழியில் தனது மொபட்டை திருப்பியதாக கூறப்படுகிறது.
அப்போது கும்பகோணத்தில் சிமெண்டு மூட்டைகளை இறக்கிவிட்டு தா.பழூர் வழியாக வி.கைகாட்டிக்கு சென்ற கொண்டிருந்த லாரி, ஜோதியின் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஜோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இதை பார்த்த பொதுமக்கள் தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார், ஜோதியின் உடலை கைப்பற்றி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story