‘தமிழகத்தில் முழு ஊரடங்கால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது’ மேட்டூரில் மு.க.ஸ்டாலின் பேட்டி
‘முழு ஊரடங்கால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது’ என்று மேட்டூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சேலம்:
‘முழு ஊரடங்கால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது’ என்று மேட்டூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மு.க.ஸ்டாலின் பேட்டி
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்கு நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக இன்றைய தினம்(நேற்று) தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 96.8 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 66.84 டி.எம்.சி.யாகவும் உள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்ட நாளில் இருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதம் 12-ந் தேதி 18-வது முறையாக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 2001-2002-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ச்சியாக 2-வது ஆண்டாக இந்தாண்டு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
உழவர்கள் மகிழ்ச்சி
மேட்டூர் அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறந்து விடுவதன் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், நாகை அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறப்பதில் இந்த அரசு உறுதியாக இருந்தது. குறிப்பிட்ட இந்த நாளில் மேட்டூர் அணையை திறப்பதன் மூலமாக சரியான காலத்தில் தண்ணீர் கிடைக்கிறது. பாசன பரப்பும், உற்பத்தியும் அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மார்ச் மாதம் 7-ந் தேதி அன்று திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் 7 உறுதிமொழிகளை நான் நாட்டு மக்களுக்கு அளித்தேன். தி.மு.க. ஆட்சி அமையும்போது 7 முக்கியமான இலக்குகளை கொண்டதாக அது அமையும் என்று தெளிவாக எடுத்து கூறினேன். அதில், மிக முக்கியமானது மேலாண்மையும், நீர்வளமும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர் என்பதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த இலக்குகளை 10 ஆண்டு காலத்தில் அடைவோம் என்றும் உறுதி அளித்து இருந்தேன். இதற்கான திட்டமிடுதல் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம், எழில்மிகு மாநகர் உடைய மாநிலம், உயர்தர ஊரக கட்டமைப்பு, உயர்தர வாழ்க்கைத்தரம், அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் இந்த இலக்குகளை நாம் அடைய வேண்டும்.
9 மாவட்டங்களில் 647 பணிகள்
தமிழகத்தின் நிகர பயிரிடு பரப்பளவு 60 சதவீதமாக உள்ளது. இதை 75 சதவீதமாக இன்னும் 10 ஆண்டுக்குள் அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டில் வழக்கமான அளவைவிட காவிரிப்படுகையில் குறுவை சாகுபடி பரப்பு அதிகமாகி வருகிறது. இதை ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படுத்தி வரவேண்டும் என்பதுதான் தமிழக அரசின் குறிக்கோள்.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதி வரை சென்று சேரவேண்டும். அதை கண்காணிக்க அரசு உயர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு நான் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென்று ஆணையிடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 63 பணிகள், கரூர் மாவட்டத்தில் 10 பணிகள், அரியலூர் மாவட்டத்தில் 33 பணிகள், தஞ்சை மாவட்டத்தில் 185 பணிகள், திருவாரூர் மாவட்டத்தில் 174 பணிகள், நாகை மாவட்டத்தில் 89 பணிகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் 26 பணிகள், கடலூர் மாவட்டத்தில் 58 பணிகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 பணிகள் என்று திட்டமிடப்பட்டு அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 9 மாவட்டங்களில் 647 பணிகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றன. ரூ.65.10 கோடி மதிப்பீட்டில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் 4,061 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரப்படும்.
நீர்வளம் மேம்படும்
இந்த பணிகளை அப்பகுதி விவசாய அமைப்புகளிடம் கலந்தாலோசித்து மேற்கொண்டுள்ளோம். இப்பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் என்பதற்காக 9 மாவட்டங்களுக்கும் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைப் பார்வையிட விவசாய அமைப்புகள் மற்றும் உழவர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தூர்வாரும் பணிகள் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நீர் வளம் மேம்படும்.
விவசாயிகளுக்கு உதவும் வகையில் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது. குறுவை சாகுபடிக்கான பணிகளை தொடங்கிட விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட வேளாண் துறை மற்றும் கூட்டுறவு துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஈடுபட்டுள்ளன. அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட சாகுபடியை தாண்டி உணவு உற்பத்தியில் தமிழகம் சாதனை படைக்கும். தற்போது நாங்கள் தொடங்கி இருப்பது, முதற்கட்ட பணிகள் தான். அடுத்த கட்ட பணிகள் தொடர்ந்து திட்டமிட்டபடி நடைபெறும்.
கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது
தமிழகத்துக்கு உரிய தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக நீர்வளத்துறை மந்திரிக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகள் குறித்து பலமுறை சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் வெள்ளை அறிக்கை வைக்கும்படி கூறினார். அதற்கு அப்போதைய ஆட்சியினர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. தற்போது அது குறித்து விவரங்கள் சேகரிக்கப்படும்.
கொரோனாவை பொறுத்தவரை நிலைமை தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. தொடர்ந்து படிப்படியாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுவருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது தினசரி தொற்று 36 ஆயிரத்தை கடந்து இருந்தது. தினசரி பாதிப்பு 60 ஆயிரத்தை தொடும் என்ற சூழல் அப்போது இருந்தது. இதன் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் படிப்படியாக நோய் தொற்று குறைந்து நேற்றைய தினம் தொற்று பாதிப்பு 16 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தது.
அதிக தடுப்பூசிகள்
சென்னையில் தினசரி பாதிப்பு 7 ஆயிரமாக இருந்தது. அது தற்போது ஆயிரமாக குறைந்துள்ளது. கோவையில் தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தில் இருந்து தற்போது அரசின் நடவடிக்கையால் 2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் நாள்தோறும் பாதிப்பு 1,500 ஆக இருந்தது. அது தற்போது 900 ஆக குறைந்துள்ளது. ஆட்சிக்கு வந்தபோது கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் இருந்தது. தற்போது இதுபோன்ற பிரச்சினைகள் இல்லாத சூழலை நாங்கள் உருவாக்கி உள்ளோம். போதுமான அளவிற்கு படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் கொரோனா கட்டளை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டளை மையத்திற்கு கடந்த மே மாதம் 20-ந் தேதி 4,768 அழைப்புகள் வந்தன. ஆனால் தற்போது இந்த கட்டளை மையத்திற்கு தினமும் 200-ல் இருந்து 300 அழைப்புகள் மட்டுமே வருகிறது. இந்த அளவிற்கு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் படிப்படியாக கொேரானா பாதிப்பை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திற்கு அதிக தடுப்பூசிகள் வேண்டுமென்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஊரடங்கில் தளர்வுகள்
பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசியமின்றி தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். தவறாமல் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். அரசு கூறும் வழிமுறைகளை தவறாமல் கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொேரானாவை முழுமையாக கட்டுப்படுத்த இயலும். மேற்கு மண்டலத்தில் தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு தொடர்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story