ஓசூரில் பட்டப்பகலில் பயங்கரம்: தொழில் அதிபர் வெட்டிக்கொலை-வட்டி பணம் கொடுக்காததால் வாலிபர் வெறிச்செயல்


ஓசூரில் பட்டப்பகலில் பயங்கரம்: தொழில் அதிபர் வெட்டிக்கொலை-வட்டி பணம் கொடுக்காததால் வாலிபர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 13 Jun 2021 2:10 AM IST (Updated: 13 Jun 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் பட்டப்பகலில் தொழில் அதிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். வட்டி பணம் கொடுக்காததால் வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்:
இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தொழில் அதிபர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அன்னைநகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 30). இவரது சொந்த ஊர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆகும். இவர் ஓசூரில் முதலாவது சிப்காட் பகுதியில் உள்ள ராஜேஸ்வரி லே-அவுட்டில் சிறிய தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு பிருந்தா என்ற மனைவியும், 3 வயதில் மகனும் உள்ளனர்.
பாலாஜி ஓசூர் வசந்த்நகரில் குடியிருந்து வரும் ரகுராம் (26) என்பவரிடம் ரூ.31 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார். இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக பாலாஜி நடத்தி வந்த தொழிற்சாலை இயங்கவில்லை. போதிய வருமானம் இல்லாததால் அவரால் ரகுராமிற்கு வட்டி பணத்தை கொடுக்க முடியவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.
வெட்டிக்கொலை
இதுகுறித்து தகவல் அறிந்த பாலாஜியின் பெற்றோர் ஓசூர் வந்து, ரகுராமிடம் மாதம் ரூ.5 லட்சம் வீதம் பணத்தை கொடுத்து விடுவதாக கூறியதாக தெரிகிறது. இந்தநிலையில், நேற்று பணம் கொடுக்க வேண்டிய தேதி என்பதால், ரகுராம், பாலாஜியிடம் பணத்தை கேட்டார். இதையடுத்து ரகுராமின் வீட்டிற்கு சென்ற பாலாஜி, அவரிடம் காசோலை ஒன்றை கொடுத்தார்.
ஏற்கனவே பாலாஜி கொடுத்த காசோலை ஒன்றில் பணம் இல்லாமல் திரும்ப வந்த நிலையில், மீண்டும் அவர் காசோலை கொடுத்தது ரகுராமிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரகுராம், வீட்டிற்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து பாலாஜியை சரமாரியாக வெட்டினார். இதில் பாலாஜிக்கு இடது கை துண்டானது. 
மேலும் உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பாலாஜியை கொலை செய்ததும், ரகுராம் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி விட்டார்.
போலீசார் விசாரணை
இந்தநிலையில், பாலாஜி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்ட பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையின் போது ரகுராமுடன், மோகன் என்பவரும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. 
கைது
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுராம், மோகனை வலைவீசி தேடி வந்தனர். இதில் ரகுராமை நேற்று மாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூரில் பண விவகாரத்தில் தொழில் அதிபர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story