சேலத்தில் ஒன்றிணைவோம் வா திட்டத்தில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு 5 கிலோ அரிசி தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வழங்கினார்
சேலத்தில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் தி.மு.க. சார்பில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசியை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வழங்கினார்.
சேலம்:
சேலத்தில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் தி.மு.க. சார்பில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசியை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வழங்கினார்.
5 கிலோ அரிசி
சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் தி.மு.க. சார்பில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 49 ஆயிரம் ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை நேற்று முன்தினம் சேலத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பொதுமக்களுக்கு அரிசி வழங்க தி.மு.க. சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக சேலம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட கன்னங்குறிச்சியில் நேற்று மாலை ரேஷன்கார்டுதாரர்கள் சுமார் 200 பேருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உதயநிதி ஸ்டாலின்
இதில், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தலா 5 கிலோ அரிசியை வழங்கினார். அப்போது, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மாநகர செயலாளர் ஜெயக்குமார், வக்கீல் அண்ணாமலை, முன்னாள் பேரூராட்சி தலைவர் குபேந்திரன், விவசாய அணி முன்னாள் துணை அமைப்பாளர் சாரதி சீனிவாசன், குமாரசாமிபட்டி பகுதி செயலாளர் சாந்தமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து சேலம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டையிலும், கெங்கவல்லி தொகுதியில் கெங்கவல்லி பேரூராட்சியிலும், ஆத்தூர் தொகுதியில் ஆத்தூர் நகராட்சி பகுதியிலும், ஏற்காடு தொகுதியில் வாழப்பாடியிலும், வீரபாண்டி தொகுதியில் நிலவாரப்பட்டியிலும் நடந்த நிகழ்ச்சிகளில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசியை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இன்று 5 தொகுதிகளில்
இந்நிலையில், 2-வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட அழகாபுரத்திலும், அதன்பிறகு 10.30 மணிக்கு ஓமலூர் தொகுதியில் ஓமலூர் பேரூராட்சியிலும், 11 மணிக்கு மேட்டூர் தொகுதிக்கு உட்பட்ட சிந்தாமணியூரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தலா 5 கிலோ அரிசியை வழங்குகிறார்.
இதைத்தொடர்ந்து 11.45 மணிக்கு எடப்பாடி தொகுதியில் கச்சுப்பள்ளியிலும், மதியம் 12.30 மணிக்கு சங்ககிரி தொகுதியில் சங்ககிரி பேரூராட்சியிலும் நடக்கும் நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரிசி வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story