உப்பிலியபுரம் அருகே விபரீதம்: தடுப்பு சுவரில் படுத்து தூங்கிய என்ஜினீயர் கிணற்றில் தவறி விழுந்து சாவு


உப்பிலியபுரம் அருகே விபரீதம்: தடுப்பு சுவரில் படுத்து தூங்கிய என்ஜினீயர் கிணற்றில் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 13 Jun 2021 4:12 AM IST (Updated: 13 Jun 2021 4:12 AM IST)
t-max-icont-min-icon

உப்பிலியபுரம் அருகே கிணற்றின் தடுப்பு சுவரில் படுத்து தூங்கிய போது, கிணற்றில் தவறி விழுந்த என்ஜினீயர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.


உப்பிலியபுரம், 
உப்பிலியபுரம் அருகே கிணற்றின் தடுப்பு சுவரில் படுத்து தூங்கிய போது, கிணற்றில் தவறி விழுந்த என்ஜினீயர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கிணற்றில் தவறி விழுந்த என்ஜினீயர்

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோணக்கரையை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 34). என்ஜினீயரான இவர் வெள்ளாளப்பட்டியிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். செல்வகுமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த செல்வகுமார், சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் உள்ள 70 அடி ஆழ தோட்டத்து கிணற்றின் தடுப்பு சுவரில் படுத்து தூங்கியதாக தெரிகிறது. அப்போது, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவர் கிணற்றுக்குள் உருண்டு விழுந்துவிட்டார். 

நீரில் மூழ்கி சாவு

கிணற்றில் 20 அடி உயரத்துக்கு தண்ணீர் இருந்ததால், அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே வீட்டில் இருந்த செல்வகுமாரை காணாமல் அவரை அக்கம் பக்கத்தில் தேடியபோது, கிணற்றின் கரையில் செருப்பும், செல்போனும் இருந்தது. அப்போது தான் அவர் கிணற்றில் விழுந்து இறந்தது தெரியவந்தது.
 
இதுபற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து செல்வகுமாரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story