திருச்சியில் வாலிபருக்கு மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்பட 4 பேர் கைது
திருச்சியில் வாலிபருக்கு மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கே.கே.நகர்,
திருச்சியில் வாலிபருக்கு மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவதூறு கருத்து
திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனி பகுதியில் கார் உதிரி பாக சேவை நிறுவனம் நடத்தி வருபவர் வினோத் (வயது 37). இவர் டுவிட்டர் மூலம் அரசியல் கட்சித்தலைவர்களை பற்றி அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டுவந்ததாக கூறப்படுகிறது.
அதற்கு அவரது நண்பர்கள் லைக் கொடுப்பது மற்றும் கருத்து தெரிவிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் வினோத் கடந்த சில நாட்களாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றி அவதூறான கருத்துக்களை பதிவிட்டதாக கூறப்படுகிறது.
மிரட்டல்
இதனால் நேற்று முன்தினம் வினோத்தின் நிறுவனத்திற்கு சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அவருடைய நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், நாம் தமிழர் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் மற்றொரு வினோத், மாநில தகவல் தொழில்நுட்பத்துறை பொறுப்பாளர் சந்தோஷ், மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சரவணன் மற்றும் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் வினோத்தை மிரட்டியதோடு மன்னிப்பும் கேட்டு வீடியோ வெளியிடுமாறு வற்புறுத்தினர்.
4 பேர் கைது
இதுதொடர்பாக வினோத் கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மற்றொரு வினோத், சந்தோஷ் மற்றும் சரவணன், சாட்டை துரைமுருகன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story