வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தலைமைச் செயலக அதிகாரியிடம் ரூ.1 லட்சம் நூதன மோசடி


வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தலைமைச் செயலக அதிகாரியிடம் ரூ.1 லட்சம் நூதன மோசடி
x
தினத்தந்தி 13 Jun 2021 11:55 AM IST (Updated: 13 Jun 2021 11:55 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தலைமைச் செயலக அதிகாரியிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திரு.வி.க. நகர், 

சென்னை பெரம்பூர் ஜவஹர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யநாராயணன் (வயது 55). இவர், தலைமைச் செயலகத்தில் இணை செயலாளராக உள்ளார். இவரது செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர், தான் வங்கியில் இருந்து பேசுவதாகவும், உங்கள் வங்கி கணக்கில் கூடுதல் தகவல் சேர்ப்பதாகவும் கூறினார்.

அதை உண்மை என்று நம்பிய சத்யநாராயணன், அந்த நபர் கேட்டபடி தனது வங்கி கணக்கு விவரங்களையும், தனது செல்போனுக்கு வந்த ரகசிய குறியீட்டு எண்ணையும் தெரிவித்தார். பின்னர் அந்த நபர் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

அதன்பிறகு சிறிது நேரத்தில் அவரது வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. பின்னர்தான் அந்த நபர், நூதன முறையில் தன்னிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்ததை சத்யநாராயணன் அறிந்தார். இதுபற்றி அவர் அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

இதுபோல் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ரகசிய குறியீட்டு எண்களை கேட்பவர்களை நம்பி அதுபோன்ற தகவல்களை அளிக்க வேண்டாம் என வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மர்மநபர்களின் மோசடி வலையில் சிக்கி தலைமைச் செயலக அதிகாரியே ரூ.1 லட்சத்தை பறிகொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story