புனே, ஐதராபாத்தில் இருந்து 3-வது நாளாக 8¼ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
புனே, ஐதராபாத்தில் இருந்து 3-வது நாளாக 8 லட்சத்து 25 ஆயிரத்து 370 தடுப்பூசிகள் சென்னை வந்தன.
ஆலந்தூர்,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 6 லட்சம் ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 1 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் தடுப்பூசி போட மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி முகாமிற்கு வருகின்றனர். எனவே கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியது.
இதையடுத்து தமிழகத்துக்கு ஜூன் மாதத்தில் 42 லட்சத்து 58 ஆயிரம் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. அதன்படி கடந்த 2 தினங்களாக 4 லட்சத்து 64 ஆயிரத்து 420 தடுப்பூசிகள் வந்தன.
இந்த நிலையில் 3-வது நாளாக நேற்று காலை ஜதராபாத்தில் இருந்து சரக்கு விமானத்தில் 25 பெட்டிகளில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 270 ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் வந்தன. பின்னர் அவை விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவ கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.
அதேபோல் மாலையில் புனேவில் இருந்து விமானத்தில் தமிழக அரசு கொள்முதல் செய்த 3 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளும், மத்திய தொகுப்பில் இருந்து 34 பெட்டிகளில் 3 லட்சத்து 99 ஆயிரத்து 100 தடுப்பூசிகளும் வந்தன.
தமிழக அரசு கொள்முதல் செய்த 3 லட்சம் தடுப்பூசிகள் தேனாம்பேட்டையில் உள்ள மாநில அரசு கிடங்கிற்கும், மத்திய தொகுப்பில் இருந்து வந்த 3 லட்சத்து 99 ஆயிரத்து 100 தடுப்பூசிகள் பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் கிடங்கிற்கும் கொண்டு செல்லப்பட்டது.
புனே, ஐதராபாத்தில் இருந்து ஒரே நாளில் 8 லட்சத்து 25 ஆயிரத்து 370 தடுப்பூசிகள் சென்னை வந்தன. கடந்த 3 நாளில் தமிழகத்துக்கு 12 லட்சத்து 89 ஆயிரத்து 790 தடுப்பூசிகள் வந்து உள்ளன. இவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story