இ-பாஸ் பெற போலி ஆவணங்கள்; விண்ணப்பங்கள் நிராகரிப்பு
இ-பாஸ் பெற போலி ஆவணங்களை பயன்படுத்துவதால் தினமும் 80 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக அதிகாரி தெரிவித்தார்.
ஊட்டி,
இ-பாஸ் பெற போலி ஆவணங்களை பயன்படுத்துவதால் தினமும் 80 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக அதிகாரி தெரிவித்தார்.
இ-பாஸ் நடைமுறை
தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர கடந்த 7-ந் தேதி முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி இறப்பு, மருத்துவ சிகிச்சை ஆகிய 2 காரணங்களுக்கு மட்டும் இ-பாஸ் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. மருத்துவ சிகிச்சைக்காக வருகிறவர்கள், அதற்கான ஆவணங்களை இணைக்க வேண்டும்.
தீவிர சோதனை
நீலகிரியில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பதிவு முறையில் அனுமதி பெற்று செல்லலாம். ஆனால் பிற மாவட்டங்களில் இருந்து வர நீலகிரியில் வசிப்பவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற்றால்தான் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதையொட்டி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார், சுகாதாரத் துறை, வருவாய் துறை இணைந்து தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அவர்கள் இ-பாஸ் அனுமதி பெற்று உள்ளார்களா என்று சோதனை செய்து சரிபார்த்த பின்னரே அனுமதிக்கின்றனர்.
போலி ஆவணங்கள்
இருப்பினும் பலர் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கும்போது தங்களது மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இல்லாததால் நீலகிரிக்கு தடுப்பூசி செலுத்த செல்வதாகவும், மருத்துவ சிகிச்சைக்கு செல்வதாகவும் பதிவு செய்து விண்ணப்பிக்கின்றனர்.
ஆனால் பெரும்பாலான விண்ணப்பங்களில் அதற்கான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை. போலி ஆவணங்கள் மூலம் பலர் விண்ணப்பித்து வருவதால் தினமும் பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகிறது.
நிராகரிப்பு
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நேற்று முன்தினம் நீலகிரிக்கு வர ஒரே நாளில் 1,087 பேர் இ-பாஸ் கோரி விண்ணப்பித்தனர். இதில் 74 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. தினமும் 1000 பேருக்கு மேல் விண்ணப்பித்து வருகின்றனர். நீலகிரியில் உயர்தர மருத்துவ சிகிச்சை இல்லாத போதும் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் இருந்து வருவதாக விண்ணப்பிக்கின்றனர்.
போலியான ஆவணங்கள் மூலம் விண்ணபிப்பதால், தினமும் 80 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது. உரிய ஆவணங்கள் இணைத்து இருந்தால் சரிபார்த்து அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story