மீன்பிடி தடைக்காலம் இன்று முடிகிறது விசைப்படகுகளை இயக்கி மீனவர்கள் வெள்ளோட்டம்


மீன்பிடி தடைக்காலம் இன்று முடிகிறது  விசைப்படகுகளை இயக்கி மீனவர்கள் வெள்ளோட்டம்
x
தினத்தந்தி 13 Jun 2021 6:24 PM IST (Updated: 13 Jun 2021 6:24 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று (திங்கட்கிழமை) முடிகிறது. இதனால் விசைப்படகுகளை இயக்கி மீனவர்கள் வெள்ளோட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று (திங்கட்கிழமை) முடிகிறது. இதனால் விசைப்படகுகளை இயக்கி மீனவர்கள் வெள்ளோட்டம் நடத்தினர்.

தடைக்காலம்

மீன்களின் இனப்பெருக்க காலமாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் வரையறுக்கப்பட்டு உள்ளன. இந்த மாதங்களில் விசைப்படகுகள், இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.
அதன்படி  தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளில் ஏற்பட்டு உள்ள சிறு, சிறு பழுதுகளை சீரமைத்தல், பெயிண்ட் அடித்தல், சேதம் அடைந்த வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த பணிகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டு படகுகளை இயக்கி வெள்ளோட்டம் பார்த்தனர். அதன்படி மீன்பிடி துறைமுகம் பகுதியில் சிறிது தூரம் படகை ஓட்டிப்பார்த்தனர்.

இன்று முடிகிறது

இந்த தடைக்காலம் இன்று (திங்கட்கிழமை) முடிவடைகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதே நேரத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு சுழற்சி முறையில் படகுகள் இயக்கப்பட்டன.

தற்போதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் சுழற்சி முறையில் படகுகள் இயக்கப்படுமா, அல்லது அனைத்து படகுகளும் இயங்க அனுமதி அளிக்கப்படுமா என்று இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது. ஆனாலும் மீனவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Next Story