முழு கொள்ளளவை எட்டிய மருதாநதி அணை; விவசாயிகள் மகிழ்ச்சி


முழு கொள்ளளவை எட்டிய மருதாநதி அணை; விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 Jun 2021 7:12 PM IST (Updated: 13 Jun 2021 7:12 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழை எதிரொலியாக அய்யம்பாளையம் மருதாநதி அணை முழு கொள்ளளவை எட்டியது.

பட்டிவீரன்பட்டி:
கொடைக்கானல் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழை எதிரொலியாக அய்யம்பாளையம் மருதாநதி அணை முழு கொள்ளளவை எட்டியது.
மருதாநதி அணை
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை உள்ளது. இந்த அணை 74 அடி உயரம் கொண்டதாகும். கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பாச்சலூர், கடுகுதடி ஆகிய இடங்களில் மழை பெய்தால் அணைக்கு நீர்வரத்து ஏற்படும்.
இந்த அணை மூலம் நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய 2 தாலுகாக்களை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சேவுகம்பட்டி ஆகிய 3 பேரூராட்சிகள், சித்தரேவு, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி ஆகிய 3 ஊராட்சிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்குகிறது. 
நீர்வரத்து அதிகரிப்பு
இந்தநிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மருதாநதி அணைக்கு நீர்வரத்து சீராக வந்ததுடன், நீர்மட்டமும் வேகமாக உயர்ந்தது. 
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அணையின் நீர்மட்டம் 68 அடியாக இருந்தது. இதற்கிடையே கடந்த 2 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. மேலும் அணைக்கு வரும் 10-க்கும் மேற்பட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நீர்வரத்து மேலும் அதிகரித்து மருதாநதி அணை நிரம்பும் தருவாயில் இருந்தது. இதற்கிடையே தொடர்மழை எதிரொலியாக, நேற்று காலை அணை நிரம்பியது. 
மருதாநதி அணையின் நீர்மட்டம் 74 அடியாக இருந்தாலும், பாதுகாப்பு கருதி 72 அடியை எட்டும்போது தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, அணை நிரம்பியதை அடுத்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் முழுவதும் அப்படியே பிரதான கால்வாய்களில் திறந்துவிடப்பட்டுள்ளது. 
விவசாயிகள் மகிழ்ச்சி
மருதாநதி அணை நிரம்பியதை தொடர்ந்து பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு மருதாநதி அணை கோடைகாலத்தில் நிரம்பியுள்ளது. அணையின் வடக்கு, தெற்கு கால்வாய்களில் பல ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
தற்போது அணை நிரம்பியதை அடுத்து உபரிநீரை வடக்கு மற்றும் தெற்கு கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Next Story