வேதாரண்யத்தில் பலத்த மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
வேதாரண்யத்தில் பலத்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் பலத்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
பலத்த மழை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் 2-வது இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் ஆண்டு தோறும் 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். ஆண்டுதோறும் வழக்கமாக ஜனவரி மாதத்தில் தொடங்கும் உப்பு உற்பத்தி இந்த ஆண்டு காலதாமதமாக பிப்ரவரி மாதத்தில் தொடங்கியது. கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரித்தால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே அவ்வப்போது மழை பெய்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேதாரண்யம் பகுதியில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் உப்பள பாத்திகளில் மழைநீர் தேங்கியதால் உப்பு வாரும் பணி பாதிக்கப்பட்டது.
உப்பு உற்பத்தி பாதிப்பு
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இந்த மழையினால் உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து உப்பளங்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிந்து மீண்டும் உற்பத்தி செய்ய ஒரு வாரம் ஆகும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பை தார்பாய் மற்றும் பனைஓலைகளை கொண்டு மூடி பாதுகாக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டு உற்பத்தியான 6 லட்சம் டன்னை இந்த ஆண்டு எட்ட முடியாது. உற்பத்தி மழையினால் பாதிக்கப்படுவதால் உப்பு விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story