இயற்கை உரத்துக்காக வயல்களில் செம்மறி ஆடுகளை மேயவிடும் திருவாரூர் விவசாயிகள்


இயற்கை உரத்துக்காக வயல்களில் செம்மறி ஆடுகளை மேயவிடும் திருவாரூர் விவசாயிகள்
x
தினத்தந்தி 13 Jun 2021 8:28 PM IST (Updated: 13 Jun 2021 8:28 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் செம்மறி ஆடுகளின் கழிவுகளை இயற்கை உரமாக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். ரசாயன உர பயன்பாட்டினை தவிர்த்து இயற்கை சாகுபடி ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருவாரூர்:-

திருவாரூர் மாவட்டத்தில் செம்மறி ஆடுகளின் கழிவுகளை இயற்கை உரமாக விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். ரசாயன உர பயன்பாட்டினை தவிர்த்து இயற்கை சாகுபடி ஆர்வம் காட்டி வருகின்றனர்.

3 போகம் நெல் சாகுபடி

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். கடந்த 8 ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்சினை காரணமாகவும், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும் குறுவை சாகுபடி மேற்கொள்ள ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. தண்ணீர் பற்றாக்குறையால் டெல்டா விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடியை மட்டுமே செய்ய முடிந்தது. 
கடந்த ஆண்டு (2020) மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

இயற்கை முறையில் சாகுபடி

திருவாரூர் மாவட்டத்தில் 32 ஆயிரத்து 800 எக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக விவசாயிகள் தங்களது விளை நிலங்களை சாகுபடிக்காக தயார்படுத்தி வருகின்றனர். குறுவை சாகுபடி பணிகள் தொடங்கிய நிலையில் உரங்களில் பயன்பாடு மிக அவசியமாகிறது. 
ரசாயன உரங்களின் விலை உயர்வு, தொடந்து பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால் மண் வளம் மாறி மகசூல் குறைந்து வருவது போன்ற காரணங்களால் இயற்கை முறையிலான சாகுபடிக்கு விவசாயிகள் திரும்பி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ரசாயன உரங்கள் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் வயல்களில் ஆடுகளை மேயவிட்டு அதன் மூலம் கிடைக்கும் எருவை உரமாக்கி வருகின்றனர். 

ஆடு மேய்ச்சல்

இதற்காக ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து செம்மறி ஆடுகளை திருவாரூர் விவசாயிகள் வயல்களில் மேய விட்டுள்ளனர். 
இதன் மூலம் விளை நிலங்களில் இயற்கை உரம் கிடைப்பதுடன், மண் வளமும் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Next Story