தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசி தேவை
கொரோனா தொற்றுக்கு ஒரே விடிவு, தடுப்பூசி மட்டும் தான் என்றும், தமிழகத்திற்கு 12 கோடி தடுப்பூசி தேவைப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேல்மலையனூர்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் கொரோனா தடுப்பூசி மையத்தையும், செஞ்சி அரசு மருத்துவமனையிலும், வளத்தி, மேல்சித்தாமூர், திண்டிவனம் ஆகிய பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நேற்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தடுப்பூசி
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்கள், மலை கிராமங்கள், பழங்குடி மக்கள் இருக்கும் பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மலைகிராமங்களை பொறுத்தவரையில் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதிக்கே நேரடியாக சென்று தடுப்பூசிகள் போடப்படுகிறது.
தமிழகத்திற்கு தடுப்பூசி தேவை என்பது நிச்சயம். 12 கோடி தடுப்பூசி தேவை என்றாலும், இதுவரை ஒரு கோடி பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்பதே நிறைவை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மற்றும் ஆதரவு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்கும் போது தினசாி பாதிப்பு 20 ஆயிரம் என்கிற நிலையில் தான் இருந்தது. பின்பு படிப்படியாக உயர்ந்து 36 ஆயிரத்தை கடந்தது. அது இன்றைக்கு சரிந்து 15 ஆயிரத்தில் வந்து நிற்கிறது.
ஒரே விடிவு
கடந்த ஆட்சியில் கொரோனா முதல் அலை கட்டுக்குள் வர 1½ ஆண்டுகள் ஆகியது. ஆனால் தற்போது முதல்-அமைச்சரின் தீவிர முயற்சியால் இரண்டாம் அலை 1½ மாதங்களிலேயே கட்டுக்குள் வந்துவிட்டது. தற்போது 28 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 500-க்கு குறைவாகவும், 5 மாவட்டங்களில், 500-க்கு அதிகமாகவும், 2 மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் அதிகமாகவும், 2 மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவாகவும் பாதிப்பு உள்ளது. இந்த தொற்று விரைவில் முற்றுபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே கொரோனா தொற்றுக்கு ஒரே விடிவு, இந்த தடுப்பூசி மட்டும்தான்.
மத்திய அரசின் தொகுப்பில் இருந்து தடுப்பூசிகள் வரவர அனைத்து பதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த தடுப்பூசிகளை இந்த பகுதிகளில் உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கலெக்டர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் லோகநாதன், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், சுகாதாரத்துறை இயக்குனர் செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், தாசில்தார் நெகருன்னிசா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பந்தம், தேவராஜன் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
1,499 பேருக்கு கருப்பு பூஞ்சை
அதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1,499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 961 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 538 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் இருப்பு உள்ளது. அதனால் இந்நோய் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. இந்நோயை தடுக்க 10 ஆயிரம் மருந்துகள் வந்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தற்போது 52 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளது. 69 இடங்களில் சித்தா, ஆயுர்வேத மருத்துவமனைகள் உள்ளது. கொரோனா தாக்கம் குறைந்தாலும் இந்த மருத்துவமனைகள் அனைத்தும் மூடப்படாமல், தொடர்ந்து இயங்கும் என்றார். அப்போது புகழேந்தி எம்.எல்.ஏ., மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் கனகராஜ், துணை செயலாளர் புஷ்பராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story