வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; சிறுவன் உள்பட 2 பேர் பலி
வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அய்யனார் நகரை சேர்ந்தவர் மணி (வயது 53). மூங்கில் கூடை வியாபாரி. இவர் வழக்கம்போல் நேற்று வியாபாரத்திற்காக எரியோடு பகுதிக்கு சென்றார். உடன் அவரது உறவினர்களான ஜெகன் மகன் தர்ஷன் (5), கண்ணன் மகன் சபரி (12) ஆகியோரும் சென்றனர்.
வியாபாரத்தை முடித்துவிட்டு சிறுவர்களுடன் மணி எரியோட்டில் இருந்து வேடசந்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார். வேடசந்தூர் அருகே ஸ்ரீராமபுரம் அருகே அவர்கள் வந்தபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றனர்.
இதற்கிடையே எதிரே சித்தூரை சேர்ந்த காளிமுத்து (20) என்பவர் வேடசந்தூரில் இருந்து மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மணி மற்றும் காளிமுத்துவின் மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேராக மோதிக்கொண்டன.
2 பேர் பலி
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த மணி, தர்ஷன், சபரி மற்றும் காளிமுத்து ஆகிய 4 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்கள் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தர்ஷன், மணி ஆகியோர் பரிதாபமாக இறந்துபோயினர். சபரி, காளிமுத்து ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story