திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 13 பேர் பலி


திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 13 பேர் பலி
x
தினத்தந்தி 13 Jun 2021 10:29 PM IST (Updated: 13 Jun 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 13 பேர் பலியாகி உள்ளனர்.

 திண்டுக்கல் :
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. 
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு சில நாட்கள் மட்டும் இறப்பு எண்ணிக்கை குறைவாக இருந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 512 பேர் பலியாகியுள்ளனர். 
இதற்கிடையே நேற்று மேலும் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதன் மூலம் இறப்பு எண்ணிக்கை 525 ஆக அதிகரித்தது. இறந்தவர்களில் 6 பேர் பெண்கள் ஆவர். 
இதில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 10 பேரும், கோவை தனியார் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 73 வயது மூதாட்டி மற்றும் 40 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 5 பெண்கள் அடங்குவர்.
மேலும் 67, 71 வயதுடைய 2 முதியவர்கள் மற்றும் 30 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 5 ஆண்களும் அடங்குவர். கடந்த சில நாட்களாக கொரோனா இறப்பு குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரித்தது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 
இதற்கிடையே நேற்று 42 பெண்கள், ஒரு போலீஸ்காரர் உள்பட மேலும் 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்து 317 ஆக அதிகரித்தது.  அதேநேரம் 309 பேர், கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 1,639 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story