நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் வசூலிக்க வேண்டும் அமைச்சர் பேட்டி
நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கூறினார்.
கரூர்
அமைச்சர் ஆய்வு
கரூரில் உள்ள மாவட்ட மைய நூலகம், கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நரிகட்டியூர் அரசு மாதிரி தொடக்கப்பள்ளி, க.பரமத்தி அரசு மாதிரி தொடக்கப்பள்ளி, புலியூர் ராணி மெய்யம்மை அரசு நிதியுதவி பெறும் பள்ளி, சிவாயம் மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் அடிப்படை வசதிகள் குறித்து நேற்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
பேட்டி
பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளிலும் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கரூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது பள்ளிகளில் உள்ள குறைகளை கேட்டறிந்து படிப்படியாக தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள அனைத்து மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி தரப்பட உள்ளது. கொரோனா தொற்றின் பரவல் முற்றிலும் குறைந்த பின் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளையும் திறக்க தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அந்தந்த மாவட்ட நூலகங்களில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கல்விக்கட்டணம்
கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் தங்களிடம் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்விக்கட்டணத்தை நீதிமன்றம் கூறிய வழிகாட்டுதலின்படி வசூலிக்க வேண்டும். அதைமீறி கல்விக்கட்டணம் செலுத்த சொல்வது பற்றி பள்ளிக்கல்வித்துறைக்கு தகவல் வந்தால் அந்தந்த பள்ளிகள் மீது முதன்மை கல்வி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பயிலும் மாணவ-மாணவிகளின் நலன்கருதி தமிழக அரசு நீட் தேர்வு தொடர்பாக குழு அமைத்துள்ளது. அந்தக்குழு அளிக்கவுள்ள முடிவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வகுப்பறை கட்டிடம்
முன்னதாக தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நரிக்கட்டியூர் அரசு மாதிரி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் மூலமாக கட்டப்பட்டு வரும் புதிய 2 வகுப்பறை கட்டிடத்தையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, முதன்மைக் கல்வி அலுவலர் மகேஷ்வரி, மாவட்ட நூலகர் மாதேஸ்வரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story