கரூருக்கு கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்கீடு; நீண்ட வரிசையில் அமர்ந்து பொதுமக்கள் போட்டு கொண்டனர்


கரூருக்கு கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்கீடு; நீண்ட வரிசையில் அமர்ந்து பொதுமக்கள் போட்டு கொண்டனர்
x
தினத்தந்தி 13 Jun 2021 10:50 PM IST (Updated: 13 Jun 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் அதிகளவில் வருவதால் கரூருக்கு கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதனை நீண்ட வரிசையில் அமர்ந்து பொதுமக்கள் போட்டு கொண்டனர்.

கரூர்
கொரோனா 
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தீவிரத்தை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், பொது மக்கள் முக கவசம் அணிந்தும் வெளியே வர வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கரூர் நகராட்சிக்குட்ட பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள நீண்ட வரிசையில் ஏராளமானவர்கள் முண்டியடித்து கொண்டு நின்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து முதலில் வந்த 500 பேருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. மற்றவர்கள் தடுப்பூசி போடுவதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கீடு 
இதையடுத்து உடனடி நடவடிக்கையாக கரூர் நகராட்சிக்குட்ட பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வரும் முகாமிற்கு கூடுதலாக 100 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்தம் 600 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நீண்ட வரிசை 
இதையறிந்த பொதுமக்கள் நேற்று அதிகாலை முதலே  பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள குவிந்தனர். இதையடுத்து அனைவரும் நீண்ட வரிசையில் அமர வைக்கப்பட்டு முதலில் வந்த 600 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 
அதன்பிறகு வந்தவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி போடும் நாள் அறிவித்த பிறகு வந்து போட்டு கொள்ளும் படி சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

Next Story