குமரி மாவட்ட பள்ளிக்கூடங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை
குமரி மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை இன்று (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளது. பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை இன்று (திங்கட்கிழமை) தொடங்கப்பட உள்ளது. பள்ளிகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்.
கொரோனா தொற்று
கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி நேரடி வகுப்புகள் நடத்த முடியாத நிலை உள்ளது. இந்த ஆண்டு கடந்த ஜனவரியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை மட்டும் நேரடி வகுப்புகள் நடந்தது. அதுவும் கொரோனா இரண்டாம் அலை எச்சரிக்கையை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில் பல மாநிலங்களில் சி.பி.எஸ்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளை ரத்து செய்தது. உயர்கல்விக்கு பிளஸ்-2 மதிப்பெண் முக்கியத்துவம் என்பதால் தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை கூறியது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யபடுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
பிளஸ்-1 மாணவர் சேர்க்கை
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதில் ஒன்றாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்கும்படி அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
குமரி மாவட்டத்தை பொருத்த வரையில் இன்று (திங்கட்கிழமை) முதல் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்குகிறது. மாணவர் சேர்க்கைக்காக பெற்றோர் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர உள்ளனர். முன்னதாக ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை மாணவ-மாணவிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே குமரி மாவட்டத்துக்கு வந்தன. பின்னர், அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
பாட புத்தகங்கள்
இந்த நிலையில் பாட புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும்படி தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று ஒரு சில பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று முதல் அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
ஆனால் பாட புத்தகங்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்க இன்னும் உத்தரவு வரவில்லை. அதோடு பாட புத்தகங்கள் இன்னும் முழுமையாக குமரி மாவட்டத்திற்கு வந்து சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிருமி நாசினி தெளிப்பு
இதற்கிடையே பள்ளிகள் செயல்பட உள்ளதால் பள்ளிகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று நடந்தது. ஒவ்வொரு பள்ளிகளிலும் மேஜை, நாற்காலி உள்ளிட்டவற்றை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், கழிவறைகள், மாணவர்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story