டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
டாஸ்மாக் கடைகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடலூர்,
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் எப்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று மதுபிரியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடனான ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மது பாட்டில்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. அதன்படி டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட வேண்டும். அனைத்து பணியாளர்களும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
கடைகளை திறக்கும் போதும், மூடும் போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பிளீச்சிங் பவுடர் ஒரு நாளைக்கு 2 முறை தெளிக்க வேண்டும். மதுபாட்டில்கள் வாங்க வரும் நபர்கள் வரிசையில் நிற்கும் வகையில் வட்டம் வரைய வேண்டும்.
ஒவ்வொரு வட்டத்திற்கும் இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது போன்ற பல்வேறு விதிமுறைகளை அறிவித்தது.
144 டாஸ்மாக் கடைகள்
அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) 144 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட இருக்கிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் டாஸ்மாக் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதாவது டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு தடுப்பு கட்டைகள் அமைத்தல், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் வரைதல், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story