35 நாட்களுக்கு பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்படுகிறது


35 நாட்களுக்கு பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்படுகிறது
x
தினத்தந்தி 13 Jun 2021 11:10 PM IST (Updated: 13 Jun 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் 35 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க கடைகளின் முன்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 35 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க கடைகளின் முன்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.  
மதுக்கடைகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் மதுகடைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பின்பு அடுத்தடுத்து பல கட்டங்களாக தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் கூடுதலாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
35 நாட்களுக்கு பிறகு...
குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து இருப்பதால் 35 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. மாவட்டத்தில் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மதுக்கடைகள் செயல்படும் என்று டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் 113 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் நாளை (அதாவது இன்று) திறக்கப்பட உள்ளது. அரசு உத்தரவுபடி மொத்தமாக மதுபானங்களை யாருக்கும் விற்கப்படாது. சில்லறையாக மட்டும் தான் விற்பனை செய்யப்படும். அதோடு மதுக்கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மது வாங்க வருவோர் 6 அடி இடைவெளிவிட்டு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
மேலும் ஒவ்வொரு மதுக்கடை முன்பும் ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டம் போடப்பட்டு உள்ளது. தடுப்புவேலியும் அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வட்டத்தில் நின்றுதான் மதுபானங்களை வாங்க வேண்டும். கடைகளை திறக்கும் போதும், மூடும் போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வலியுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் குடை கொண்டு வரும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
முன்னதாக கோட்டார் போலீஸ் நிலையத்தில் டாஸ்மாக் ஊழியர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது, நாகர்கோவிலில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது. 

Next Story