சக மாணவன் கற்பழித்ததால் பிளஸ்-1 மாணவிக்கு பெண் குழந்தை


சக மாணவன் கற்பழித்ததால்  பிளஸ்-1 மாணவிக்கு பெண் குழந்தை
x
தினத்தந்தி 13 Jun 2021 6:08 PM GMT (Updated: 13 Jun 2021 6:08 PM GMT)

சக மாணவன் ஆசைவார்த்தை கூறி கற்பழித்ததால் பிளஸ்-1 மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை தத்து கொடுத்ததால் இந்த விவகாரம் வெளிவந்து அந்த மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.

திருப்பத்தூர்,

சக மாணவன் ஆசைவார்த்தை கூறி கற்பழித்ததால் பிளஸ்-1 மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை தத்து கொடுத்ததால் இந்த விவகாரம் வெளிவந்து அந்த மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான்.

பிளஸ்-1 மாணவி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர், 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த மாணவருக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த சகமாணவி ஒருவக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவன் அடிக்கடி மாணவியின் வீட்டிற்கு புத்தகம் வாங்குவதற்காக சென்றதாக தெரிகிறது.
இதற்கிடையே மாணவன், அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி கற்பழித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் மாணவி கர்ப்பம் அடைந்தார். ஆனால் அதனை தன் பெற்றோருக்கு தெரியாமல் மறைத்துள்ளார்.

பெண் குழந்தை

இந்தநிலையில் மாணவியின் அக்காளை பிரசவத்திற்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது அங்கு சென்றிருந்த அந்த பிளஸ்-1 மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அந்த மாணவி கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதைக்கேட்டு அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மாணவியின் உடல்நிலை மோசமானதால் கடந்த மாதம் 19-ந் தேதி பிரசவம் நடந்து, அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து அந்த பெண் குழந்தையை அந்த ஆஸ்பத்திரியில் செவிலியராக வேலை பார்க்கும் செல்வி என்பவர், தனது உறவினரான பாகம்பிரியாளுக்கு குழந்தை இல்லை என்றும், எனவே இந்த பெண் குழந்தையை அவரிடம் கொடுத்துவிடலாம் எனவும் தெரிவித்து இருக்கிறார். அதன்படி பாகம்பிரியாளிடம் குழந்தையை ரகசியமாக தத்து கொடுத்துள்ளனர்.

2 பேர் கைது

இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சைமன் ஜார்ஜூவுக்கு தெரியவந்தது. அவர், திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வி விசாரணை நடத்தினார்.
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன், குழந்தையை யாருக்கும் தெரியாமல் தத்து கொடுத்ததற்காக மாணவியின் தந்தை, செவிலியர் செல்வி, குழந்தையை தத்தெடுத்த பாகம்பிரியாள், மற்றும் பிரசவம் பார்த்த டாக்டர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். அதே போல் மாணவியின் தந்தையும் கைது செய்யப்பட்டார். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் மாணவிக்கு பிறந்த குழந்தையை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Next Story