விதிகளை பின்பற்றி மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும். கோட்ட மேலாளர் அறிவுறுத்தல்
வேலூர் கோட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி மது விற்பனை செய்ய வேண்டும் என்று கோட்ட மேலாளர் கீதாராணி அறிவுறுத்தினார்.
வேலூர்
டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 10-ந் தேதி தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தற்போது வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 27 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது.
அதையடுத்து வேலூர் டாஸ்மாக் கோட்டத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 116 டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் வேலூரில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், வேலூர், திருப்பத்தூர் மாவட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி
கூட்டத்துக்கு வேலூர் கோட்ட மேலாளர் கீதாராணி தலைமை தாங்கி பேசியதாவது:-
டாஸ்மாக் கடைகளில் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும். டாஸ்மாக் கடை ஊழியர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். அதேபோன்று முககவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே மது, பீர் வகைகளை கொடுக்க வேண்டும்.
கடையின் முன்பு சமூக இடைவெளியை பின்பற்றி மதுபானங்கள் வாங்க குறிப்பிட்ட இடைவெளியில் வட்டம் வரையப்பட வேண்டும். மேலும் கூட்ட நெரிசலை தடுக்க கடைகளின் முன்பு சில அடி தூரத்துக்கு சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்க வேண்டும். அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்க கூடாது.
காலை 10 மணிக்கு கடைகளை திறந்து மாலை 5 மணிக்கு மூடி விட வேண்டும். அதன்பின்னர் மதுபானங்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் முன்பு சவுக்கு கட்டைகள் அடிப்பது, வட்டம் வரையும் பணியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story