ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள காரிக்கூட்டம் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜுனைதீன். இவருடைய மகன் முகம்மது அக்மல் (வயது 24). இவர் வாணியில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு விளையாட சென்றுள்ளார். அப்போது காரிக்கூட்டம் பகுதியை சேர்ந்த உமருல் ஜமீம் என்பவர் அங்கு வந்து, தான் கஞ்சா வியாபாரம் செய்ததாக போலீசாருக்கு தகவல் சொன்னதாக நினைத்து தனது நண்பர்களான காரிக்கூட்டம் முகம்மது பைசல், சேக்சுல்தான் ஆகியோருடன் சேர்ந்து முகம்மது அக்மலை தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் கத்தியால் முகம்மது அக்மல் நெற்றியில் குத்தி விட்டு தப்பி விட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து முகம்மது பைசல் (26), சேக்சுல்தான் (27) ஆகிய 2 பேரை கைதுசெய்தனர். உமருல்ஜமீம் என்பவரை தேடி வருகின்றனர்.