கள்ளக்காதல் தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றேன் கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்


கள்ளக்காதல் தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றேன் கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 14 Jun 2021 12:12 AM IST (Updated: 14 Jun 2021 12:12 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதல் தகராறில் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றேன் கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

குமாரபாளையம்:
கள்ளக்காதல் தொடர்பான தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து ெகான்றதாக கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
வாக்குமூலம்
ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 30). இவருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அறிவழகன் மகள் தரணிதேவிக்கும் (25) திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் சுகின் என்ற மகன் உள்ளான். இந்தநிலையில் சபரிநாதன், மனைவி மற்றும் மகனுடன் ஆத்தூரில் உள்ள மாமானார் வீட்டுக்கு காரில் சென்றார். 
பின்னர் மகனை மாமனார் வீட்டில் விட்டு விட்டு கணவனும், மனைவியும் காரில் அந்தியூருக்கு சென்றபோது குமாரபாளையம் கோட்டைமேடு பைபாஸ் சாலையில் வந்தபோது காரில் இருந்த தரணிதேவி மயங்கினாராம். பின்னர் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு ெகாண்டு சென்று அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் தரணிதேவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 
இளம்பெண் மர்மசாவு குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிநாதனை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் சபரிநாதன் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமானது. போலீசாரிடம் சபரிநாதன் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
கள்ளக்காதல்
நான் திருமணத்திற்கு முன்பு ராணுவத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தேன். எனக்கு ராணுவத்தில் வேலை செய்ய பிடிக்கவில்லை. இதனால் அங்கிருந்து விலகி அரசு வங்கியில் தற்காலிக பணியாளராக வேலைக்கு சேர்ந்தேன். திருமணத்திற்கு முன்பே, எனக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது. இந்த சூழ்நிலையில் தான் எனக்கும் தரணிதேவிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்பு எங்களது கள்ளக்காதல் குறித்து என்னுடைய மனைவிக்கு தெரியவந்தது. இதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்தது. இதையொட்டி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தரணிதேவி கோபித்து கொண்டு ஆத்தூரில் உள்ள அவருடைய தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
பின்னர் நான் ஆத்தூருக்கு சென்று மனைவியை சமாதானப்படுத்தி புதிய வீட்டிற்கு தனிக்குடித்தனம் போகலாம் வா என்று கூறி அழைத்து வந்தேன். புறப்படும்போது எனது காரை அங்கேயே நிறுத்திவிட்டு மாமனார் அறிவழகனின் காரில் பொருட்களை எடுத்துக்கொண்டு நாங்கள் இருவரும் வந்தோம். பின்னர் குமாரபாளையம் வைகுந்தம் சுங்கச்சாவடியில் வரும்போது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனால் ஆத்திரமடைந்த நான் பல்லக்காபாளையத்தில் வந்தபோது அவள் கன்னத்தில் அடித்தேன். இதையடுத்து அவளது கழுத்தை நெரித்தேன். இதில் தரணி தேவி இறந்து விட்டார். 
நாடகமாடினேன்
பின்னா் அவள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கழற்றி ஒரு இடத்தில் மூடி வைத்துவிட்டு அந்தியூரில் உள்ள எனது தந்தைக்கு தகவல் தெரிவித்து விட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். அங்கு அவளது உடலை பரிசோதிக்க முடியாது என்று கூறிவிட்டதால் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். அங்கு பரிசோதனைக்கு பிறகு மனைவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து கொலையில் இருந்து எப்படி தப்பிப்பது என்று எண்ணிய நான் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தியபோது 2 பேர் காரில் இருந்த தரணிதேவியின் நகையை பிடுங்கி கொண்டு அவளை கழுத்தை நெரித்து கொன்று விட்டனர் என நாடகமாடினேன். ஆனால் போலீசார் துருவி துருவி விசாரித்ததில் நடந்ததை கூறி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார். 
நகை மீட்பு
இதற்கிடையே பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் தரணி தேவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது தந்தை அறிவழகனிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் சபரிநாதனை‌ கூட்டிச்சென்று பதுக்கி வைத்த இடத்தில் இருந்து நகையை மீட்டனர். இதையடுத்து கொலை வழக்காக மாற்றிய போலீசார் சபரிநாதனை குமாரபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story