சாலையோரம் அறுந்து தொங்கும் வயர்களால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
அரியலூரில் சாலையோரம் அறுந்து தொங்கும் வயர்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
அரியலூர்:
அறுந்து தொங்கும் வயர்கள்
அரியலூர் நகர் முழுவதும் அரசு கேபிள் டி.வி. திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் வயர்கள் மூலம் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. சாலையோரம் உள்ள மின்கம்பங்களில் கருப்பு நிற கேபிள் வயர்கள் அனைத்து பகுதிகளிலும் கட்டப்பட்டுள்ளன.
நகரில் நூற்றுக்கணக்கான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. அவை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது கேபிள் வயரில் தொங்கியவாறு செல்கின்றன. அப்போது அவைகளுக்குள் சண்டை ஏற்பட்டால், நன்றாக உள்ள வயர்களை கடித்து துண்டு, துண்டாக ஆக்கிவிடுகின்றன. மேலும் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளில் சிக்கி வயர்கள் அறுந்து, துண்டாகி சாலை ஓரம் தொங்கிய நிலையில் உள்ளன.
மின்சார கம்பிகள் அறுந்து விடுகின்றன
அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், வயரில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. சில சமயங்களில் உயர் அழுத்த மின்சார கம்பிகள் கூட அறுந்து விடுகின்றன. கடைவீதி பகுதியில் மிகவும் தாழ்வாக கேபிள் டி.வி. வயர்கள் செல்வதால் வேகமாக வரும் வாகனங்கள் அதில் சிக்கிக் கொள்கின்றன.
மின்கம்பங்களில் அதிக அளவில் கேபிள் வயர்கள் சுற்றப்பட்டுள்ளதால் மழை காலங்களில் அதன் மூலம் மின்சாரம் பாய்ந்து விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து பேசி குரங்குகள் கடிக்காத வகையிலும், வாகனங்களில் சிக்கி வயர்கள் அறுந்து போகாமல் இருப்பதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே நகரில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.
Related Tags :
Next Story