ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு தேவையான ராணுவ இடத்தை பெற கலெக்டர் சிவராசு டெல்லி பயணம்
திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு தேவையான ராணுவ இடத்தை பெறுவதற்காக கலெக்டர் சிவராசு டெல்லி செல்கிறார்.
திருச்சி,
திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு தேவையான ராணுவ இடத்தை பெறுவதற்காக கலெக்டர் சிவராசு டெல்லி செல்கிறார்.
ரெயில்வே மேம்பால பணி
திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பால பணி கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது. இந்தப்பாலத்தின் முதல் தொகுப்பு கட்டுமான பணியை சென்னை செல்லும் சாலையுடன் இணைப்பதற்கு ராணுவ இடம் 65 சென்ட் தேவை அந்த இடத்தை வழங்குவதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் இதுவரை அனுமதி வழங்கவில்லை.
அந்த இடத்திற்கு பதிலாக தமிழ்நாடு சிறப்பு காவல்படை அணியிடம் உள்ள அதே அளவு நிலம் மாற்றாக வழங்கப்படும் என தமிழக அரசு முடிவு செய்து அதற்கான கோப்பு சென்னையிலிருந்து புனே சென்று, பின்னர் அங்கிருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இன்னும் அதற்கான அரசாணை வரவில்லை.
கலெக்டர் டெல்லி பயணம்
இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கொரோனா இரண்டாவது தவணை உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, ‘ஜங்ஷன் மேம்பால பணிக்கு தேவையான ராணுவ இடத்தை பெறுவது தொடர்பாக தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார். இந்த விவகாரத்திற்காக நானும் (கலெக்டர்) டெல்லிக்கு நேரில் செல்ல இருக்கிறேன். அரசாணை கிடைக்கப்பெற்றதும் கட்டுமானப் பணிகள் விரைவாக தொடங்கி முடிக்கப்படும்' என்றார்.
அப்போது உடன் இருந்த திருநாவுக்கரசர் எம்.பி.,‘நான் இன்னும் 2 நாட்களில் டெல்லி செல்கிறேன். மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசி, ராணுவ இடத்தை பெறுவதற்கான அரசாணை உடன் தான் திரும்புவேன்’ என்றார்
Related Tags :
Next Story