திருச்சியில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்


திருச்சியில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 14 Jun 2021 1:14 AM IST (Updated: 14 Jun 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு திருச்சி மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.

திருச்சி, 
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு திருச்சி மாநகரில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
மராமத்து பணிகள்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலானோர் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. 
அத்தியாவசிய பணிக்காக செல்லும் ஒரு சிலர் மட்டுமே வாகனங்களை ஓட்டி சென்றனர். இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பல சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. 

இந்த காலகட்டத்தில் சாக்கடை கட்டும் பணி, குடிநீர் குழாய் பொருத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு மராமத்து பணிகளை சாலைகளில் பள்ளம் தோண்டி மேற்கொண்டால் எந்த இடையூறும் இருக்காது என ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன.

சிமெண்டு தளம்

குறிப்பாக திருச்சி-தஞ்சை சாலையில் மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே ரெட்டை வாய்க்கால் பகுதியில் சாலையின் நடுவில் பள்ளம் தோண்டி இருபுறமுள்ள வாய்கால்களையும் இணைத்து தண்ணீர் ஓடும் வகையில் வாய்க்காலின் அடியில் சிமெண்டு தளம் போடும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த பணிகள் முடிந்தவுடன் மேலே தார் போட்டு சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகனங்கள் இரட்டை வாய்க்கால் வழியாக சிறிய பாதையில் சென்று வருகின்றன.

போக்குவரத்து நெரிசல்

இவை அனைத்தும் அத்தியாவசிய பணி தான் என்றாலும் திருச்சி-தஞ்சை பிரதான சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது ஊரடங்கில் இருந்து படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டது.

இதனால் அனைத்து தொழில்களும் இயல்பு நிலையை நோக்கி திரும்பி வருகின்றன. இதையடுத்து ஏராளமான வாகன ஓட்டிகள் மடை திறந்த வெள்ளம் போல் வெளியே செல்லத் தொடங்கி விட்டனர். ஆனால் ஆங்காங்கே சாலையோரம் நடக்கும் பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறுகலான சாலைகள்

திருச்சியில் பெரும்பாலும் மாநகர பகுதிகளில் குறுகலான சாலைகள் அதிக அளவில் உள்ளன. இந்த சாலைகளில் ஒரு பகுதியை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டு பணிகள் நடைபெறும் போது அந்த வழியாக கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

ஆகவே இந்த பணிகளை விரைந்து முடித்து கொடுத்தால் போக்குவரத்து நெரிசலை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். ஆகவே மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story