தென்காசியில் 6,855 பேருக்கு கொரோனா தடுப்பூசி; அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் குவிந்தனர்


தென்காசியில் 6,855 பேருக்கு கொரோனா தடுப்பூசி; அரசு ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 14 Jun 2021 1:28 AM IST (Updated: 14 Jun 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6,855 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசிகள் செலுத்த பொதுமக்கள் குவிந்தனர்.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6,855 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் தடுப்பூசிகள் செலுத்த பொதுமக்கள் குவிந்தனர்.

பொதுமக்கள் குவிந்தனர்

கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தென்காசி மாவட்டத்திற்கு நேற்று 5,000 கோவிஷீல்டு தடுப்பூசிகளும் 2,300 கோவேக்சின் தடுப்பூசிகளும் வந்தன. இவை தென்காசி மாவட்டத்தில் பல்வேறு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.

தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலையில் இருந்தே தடுப்பூசிகள் போடுவதற்கு பொதுமக்கள் குவிந்தனர். முதலில் தடுப்பூசிகள் வருவதற்கு காலதாமதம் ஆனதால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தடுப்பூசிகள் வந்ததும் அனைவரும் செலுத்தி கொண்டனர்.

அதிக ஆர்வம்

தடுப்பூசிகள் போடப்பட்டது குறித்து சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் அருணா கூறியதாவது:-
தென்காசி மாவட்டத்திற்கு மொத்தம் வந்த 7,300 தடுப்பூசிகளில் 6,855 பேருக்கு செலுத்தப்பட்டன. இன்னும் அதில் தடுப்பூசிகள் மீதி உள்ளன. இவை வீணாக்காமல் பொதுமக்களுக்கு போடப்படும். இனி அரசு தென்காசிக்கு ஒதுக்கீடு செய்யப்படுவதை பொறுத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பொதுமக்களிடையே அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் இந்த தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story