எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்ய கூடாது: பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்- சேலத்தில் முத்தரசன் வலியுறுத்தல்
பெட்ரோல்- டீசல் விலையை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும், எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்ய கூடாது என்றும் சேலத்தில் முத்தரசன் கூறினார்.
சேலம்:
பெட்ரோல்- டீசல் விலையை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்றும், எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்ய கூடாது என்றும் சேலத்தில் முத்தரசன் கூறினார்.
பேட்டி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டில் கொரோனா 2-வது அலை மிக மோசமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அதை மத்திய அரசு சரியான முறையில் கையாளவில்லை.
கொரோனா பாதிப்பும், கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. குறிப்பாக மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்குவதில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்படவில்லை. தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஜனநாயக அணுகுமுறை
6 கோடி மக்கள் வசிக்கும் குஜராத்தில் 16 சதவீதம் தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 8 கோடி மக்கள் வசிக்கும் தமிழகத்தில் வெறும் 6 சதவீதம் மட்டுமே தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டுள்ளது. நெருக்கடியான இந்த சூழ்நிலையில் கொரோனா 2-வது அலையை எதிர்கொள்வது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனநாயக அணுகு முறையை கடைபிடித்து வருகிறார். அனைத்து அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து குழுவை அமைத்து அவர்கள் அளிக்கும் ஆலோசனைப்படி ஊரடங்கு அமல்படுத்துவது, சில தளர்வுகள் அறிவிப்பது, பிளஸ்-2 தேர்வு ரத்து உள்ளிட்ட நடைமுறைகளை அறிவித்து வருகிறார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அப்படி எந்த ஆலோசனையும் எதிர்கட்சிகளிடம் இருந்து பெறவில்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து அரசியல் கட்சிகளையும் அனுசரித்து செல்கிறார். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்தது போல் நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் தான் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறையும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தாத பா.ஜனதா கட்சியினர், தற்போது மதுக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறு முத்தரசன் கூறினார்.
Related Tags :
Next Story