ஊரடங்கால் விற்பனை செய்ய முடியாமல் செடியிலேயே அழுகும் பூசணிக்காய்
ஊரடங்கால் பூசணியை விற்பனை செய்ய முடியாமல் செடியிலேயே அழுகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வாணாபுரம்
காய்கறி பயிர் சாகுபடி
வாணாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் விவசாயம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்பு, நெல், மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து மற்றும் காய்கறி பயிர்களான வெண்டை, கத்தரி, கொத்தவரை, தக்காளி ஆகிய பயிர்களும், பூக்கள் வகையான சாமந்தி, மல்லி, கோழிக்கொண்டை, கனகாம்பரம் ஆகியவைகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. பருவ கால பயிர்களான வெள்ளரி, கிர்னிபழம் ஆகியவைகளும் பயிரிடப்படுகிறது.
தச்சம்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் சாம்பல் பூசணியை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். சாம்பல் பூசணி பெரும்பாலும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகை காலங்கள், அமாவாசை தினம், வாரத்தில் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமையில் பயன்படுத்தப்படுகின்றன. ஏதேனும் பூஜை நடத்தும்போது சாலையில் போட்டு உடைக்கப்படுகிறது. அத்துடன் உணவிலும் சேர்க்கப்படுகிறது.
விவசாயிகள் கவலை
பொதுமக்கள் மத்தியில் சாம்பல் பூசணியின் பயன்பாடு அதிகளவில் உள்ளதால் மேற்கண்ட பகுதியில் 100-க்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் பயிரிடப்படும் சாம்பல் பூசணியை அறுவடை செய்து அதிகளவில் பெங்களூரு, ஆந்திர போன்ற வெளி மாநிலங்களுக்கும், கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மேற்கண்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு நன்கு வளர்ந்து செழித்திருக்கும் சாம்பல் பூசணியை ஊரடங்கால் அறுவடை செய்து ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாய நிலத்திலேயே அழுகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விவசாயிகள் பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து பயிரிடப்பட்ட சாம்பல பூசணி வீணாகி வருகிறது, என மேற்கண்ட விவசாயிகள் வேதனையோடு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story