வைத்தீஸ்வரன்கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா தர்மபுரம் ஆதீனம் பங்கேற்பு


வைத்தீஸ்வரன்கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா தர்மபுரம் ஆதீனம் பங்கேற்பு
x
தினத்தந்தி 14 Jun 2021 5:44 PM IST (Updated: 14 Jun 2021 5:44 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற தையல் நாயகி- வைத்தியநாதசாமி கோவில் அமைந்துள்ளது.

சீர்காழி,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற தையல் நாயகி- வைத்தியநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நவ கிரகங்களில் ஒன்றான செவ்வாய் பகவான், செல்வமுத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். பக்தர்களின் நோய்களை போக்கும் வைத்தியநாதசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்பு வாய்ந்த கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டது. குடமுழுக்கு முடிந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடைபெற்றன. 48-ம் நாள் முடிவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் இரண்டு கால யாகசாலை பூஜைகள் மற்றும் கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர், செவ்வாய், அம்பாள் மற்றும் செல்வமுத்துக்குமார சுவாமியை எழுந்தருள செய்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது சாமி-அம்மனுக்கு 1,008 கலச அபிஷேகமும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு 1,008 சங்காபிஷேகமும் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி கோவில் சிப்பந்திகள் உள்ளிட்ட சொற்ப எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story