கொடைக்கானலில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்
கொடைக்கானலில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்றல் காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.
கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் கடந்த 2 மாதங்களாக குளு, குளு சீசன் நிலவி வந்தது. மேலும் அவ்வப்போது கோடை மழை வெளுத்து வாங்கியது. இதனால் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரி 5 முறை நிரம்பி வழிந்தது. மேலும் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளும் நிரம்பின. இதற்கிடையே கடந்த 3 நாட்களாக கொடைக்கானலில் மழைப்பொழிவு இல்லாமல் இருந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நகரின் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. இன்றும் அதிகாலை முதல் தென்றல் காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் பகல் நேரத்திலேயே கடும் குளிர் நிலவியது. அத்துடன் மேகமூட்டங்கள் தரை இறங்கின, மலை முகடுகளை முத்தமிட்டன. இந்த காட்சிகள் காண்போரை பரவசப்படுத்தும் விதமாக இருந்தது. சாரல் மழை, தரையிறங்கிய மேகக்கூட்டங்களால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
மேலும் மழை குறைந்த போதிலும் பல்வேறு இடங்களில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதேபோல் ஆறுகளிலும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
பொதுவாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் நிலையில், கொடைக்கானலில் ஜூன் 2-வது வாரத்தில் பருவமழை தொடங்குவது வழக்கம்.
அதன்படி, கடந்த வாரம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இந்தநிலையில் கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்வதுடன், மேகக்கூட்டம் சூழ்ந்து வருவதால் நகரில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story