டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்த மதுப்பிரியர்கள்
ஊரடங்கால் ஒரு மாதத்துக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு மதுப்பிரியர்கள் படையெடுத்தனர். மேலும் டாஸ்மாக் கடைக்கு மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி அசத்தினர்.
திண்டுக்கல்:
ஊரடங்கால் ஒரு மாதத்துக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு மதுப்பிரியர்கள் படையெடுத்தனர். மேலும் டாஸ்மாக் கடைக்கு மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி அசத்தினர்.
டாஸ்மாக் கடைகள் திறப்பு
தமிழகத்தில் ஊரடங்கால் கடந்த மாதம் 10-ந்தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் ஒரு மாதமாக மதுக்கடைகள் பூட்டி கிடந்ததால், மதுப்பிரியர்கள் தவித்தனர். அதை பயன்படுத்தி ஒருசிலர் வெளிமாநிலங்களில் இருந்து மதுவை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்றனர்.
இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வு அளிக்கப்பட்டது. இதில் கொரோனா குறைந்துள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 152 மதுக்கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகளுக்கு காலை 9 மணிக்கே மதுப்பிரியர்கள் படையெடுத்தனர். இதையடுத்து காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஒரு மாதத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட மதுக்கடையை கண்டதும், ஆயிரம் வாட்ஸ் விளக்கு வெளிச்சத்தை போன்று மதுப்பிரியர்களின் முகம் பிரகாசித்தது.
மாலை-கற்பூரம்
அப்போது ஒருசில மதுப்பிரியர்கள் உணர்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டனர். இதில் திண்டுக்கல் ரவுண்டுரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை திறக்கும் முன்பே மதுப்பிரியர்கள் திரண்டனர். அதில் ஒருவர் மதுக்கடைக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் மதுக்கடை திறக்கப்பட்டதும் ஒரு மதுப்பிரியர் தேங்காய் மீது கற்பூரத்தை வைத்து ஏற்றி மதுக்கடைக்கு காண்பித்தார். அதையடுத்து தேங்காயை கடை முன்பு உடைத்து வணங்கினார். அதேபோல் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகேயுள்ள மதுக்கடையிலும் ஒருவர் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்தார்.
அதன்பின்னர் ஆர்வமுடன் மதுவை வாங்கி சென்றனர். புதிய சினிமா படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பது போன்று மதுப்பிரியர்கள் நடந்து கொண்ட விதம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
மதுவுக்கு முத்தம்
அதோடு மனதில் வீற்றிருக்கும் காதலியை கண்ட காதலனை போல் மதுபாட்டிலை வாங்கியதும் ஆசையுடன் திரும்ப திரும்ப பார்த்து ரசித்தனர். ஒருசிலர் மதுபாட்டிலுக்கு ஆசையுடன் முத்தம் கொடுத்தனர். மேலும் சிலர் ஆர்வமிகுதியில் மதுக்கடை வாசலில் நின்றவாறு, தண்ணீர் கூட கலக்காமல் அப்படியே குடித்தனர்.
அதுபோன்ற நபர்களை போலீசார் எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் பெரும்பாலான நபர்கள் ஒரே நேரத்தில் 3 முதல் 5 பாட்டில்களை வாங்கி சென்றனர். ஒருசிலர் திரும்ப திரும்ப வரிசையில் நின்று மது வாங்கினர். பலர் கை நிறைய மதுபாட்டில்களுடன் சென்றது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் பாதுகாப்பு
மேலும் பெரும்பாலான மதுக்கடைகளில் மதியம் கூடுதலாக மதுபானம் இறக்கப்பட்டது. இதனால் மதியத்துக்கு பின்னர் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமானது. எனவே, கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, பாதுகாப்பு அளிக்க அனைத்து மதுக்கடைகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டனர்.
அதோடு முககவசம் அணிந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு மதுபானம் விற்கப்பட்டது. முககவசம் அணியாதவர்கள் போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் மதுப்பிரியர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டனர். நீண்ட வரிசையில் நின்று மதுப்பிரியர்கள் மதுவாங்கி சென்றனர். ஒரு மாதத்துக்கு பின்னர் மதுக்கடை திறக்கப்பட்டதால் மாலை 5 மணி வரை மதுவிற்பனை களைகட்டியது
Related Tags :
Next Story