விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை


விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை
x
தினத்தந்தி 14 Jun 2021 5:09 PM GMT (Updated: 14 Jun 2021 5:09 PM GMT)

மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் 27 மாவட்டங்களில் மட்டும் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த வாரமே மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடந்து வருகிறது.
தமிழகத்தை காட்டிலும் புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்களின் விலை குறைவு என்பதால் அம்மாநில மதுபான வகைகளை மொத்தம், மொத்தமாக வாங்கிக்கொண்டு அதனை வாகனங்கள் மூலமாக தமிழக பகுதிக்குள் கடத்தி வந்து விற்பனை செய்யக்கூடும் என்பதால் அதனை தடுக்க  விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதிகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நேற்று மாவட்ட எல்லையான கெங்கராம்பாளையம், சிறுவந்தாடு, ராதாபுரம், கோட்டக்குப்பம், ஆரோவில், அனுமந்தபுரம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது வாகனங்களில் யாரேனும் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை விழுப்புரம் மாவட்டத்திற்கோ அல்லது விழுப்புரம் வழியாக பிற மாவட்டங்களுக்கோ கடத்திச்செல்கின்றனரா? என்றும் இ-பதிவு செய்து பயணிக்கிறார்களா? என்றும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story