முடிவுக்கு வந்தது 61 நாள் தடை காலம் விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் களைகட்ட தொடங்கியது கடலூர் துறைமுகம்


முடிவுக்கு வந்தது 61 நாள் தடை காலம் விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் களைகட்ட தொடங்கியது கடலூர் துறைமுகம்
x
தினத்தந்தி 14 Jun 2021 10:40 PM IST (Updated: 14 Jun 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைகாலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, கடலூர் துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதனால் மீண்டும் துறைமுக பகுதி களைகட்ட தொடங்கி உள்ளது.

கடலூர் முதுநகர், 

மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஏப்ரல் 15-ந்தேதி முதல், ஜூன் 14-ந்தேதி  வரை மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்தது. இதனால் கடலூர் துறைமுகத்தில் இருந்து கடந்த 61 நாட்களாக விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் தடைகாலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்ததால், விசைப்படகு மீனவர்கள் நேற்று மாலையில் இருந்தே தங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


ஐஸ்கட்டிகளை ஏற்றினர்

அதன்படி, 5 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை கடலில் தங்கி மீன் பிடிக்க ஏதுவாக, தங்களின் படகுகளில் ஐஸ்கட்டி, மீன்பிடி வலைகள், குடிதண்ணீர், உணவுப் பொருட்கள், ஏற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 

இன்று அதிகாலை குறைந்த எண்ணிக்கையிலான மீனவர்களும், நாளை (புதன்கிழமை) பெரும்பாலான மீனவர்களும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள் என கூறப்படுகிறது. இதனால் கடலூர் துறைமுக பகுதி மீண்டும் களை கட்ட தொடங்கியுள்ளது.

கட்டுப்பாடுகள்

இதுகுறித்து கடலூர் மீன்வளத்துறை இணை இயக்குனர் காத்தவராயன் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 269 விசைப்படகுகள் உள்ளன. இவைகள் அனைத்தும் கடந்த 61 நாட்களாக மீன்பிடி தடை காலத்தையொட்டி, கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதே கால கட்டத்தில் கொரானா பரவலை தடுக்கும் பொருட்டு, மீன்வளத்துறை சார்பில் மீன் விற்பனைக்கு, புதிய கட்டுப்பாடு விதிகள் விதிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி விசைப் படகுகளில் சனிடைசர் உள்ளிட்ட கொரானா தடுப்பு உபகரணங்கள் இருக்க வேண்டும். பிடித்து வரப்படும் மீன்களை மொத்த வியாபாரிகளிடம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். 

மொத்த வியாபாரிகள் மீன்களை கடலூர் துறைமுகத்திற்கு வெளியே சமூக இடைவெளியை பின்பற்றி, சில்லறை வியாபாரிகளிடம் விற்க வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஊரடங்கு காலம் இருக்கும் வரை நீடிக்கும் என அவர் கூறினார்.


Next Story