அவலாஞ்சியில் 8 செ.மீட்டர் மழை பதிவானது


அவலாஞ்சியில் 8 செ.மீட்டர் மழை பதிவானது
x
தினத்தந்தி 14 Jun 2021 10:49 PM IST (Updated: 14 Jun 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. அவலாஞ்சியில் 8 செ.மீட்டர் மழை பதிவானது.

ஊட்டி,

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. அவலாஞ்சியில் 8 செ.மீட்டர் மழை பதிவானது. இதையடுத்து மீட்பு குழுக்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது.

மரம் விழுந்தது

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பெய்யும். இதேபோல் நடப்பாண்டில் கடந்த 3-ந் தேதி முதல் பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரியில் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. 

குறிப்பாக அவலாஞ்சி, அப்பர்பவானி, கூடலூர், தேவாலா, பந்தலூர் ஆகிய பகுதிகளில் மழைபொழிவு அதிகமாக இருக்கிறது. ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது.

 நேற்று முன்தினம் நள்ளிரவு ஊட்டி-சோலூர் சாலையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மீட்பு குழுவினர் தயார் நிலை

இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரம் அறுக்கும் எந்திரம் மூலம் துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். பலத்த காற்றுடன் மழை பெய்வதால் மரங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளது. மரங்களுக்கு அருகே நிற்பது, வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

கோத்தகிரி-குன்னூர் சாலையில் மூணுரோடு பகுதியில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று வேரோடு சாலையின் குறுக்கே விழுந்தது. இதனை குன்னூர் தீயணைப்பு படையினர் வெட்டி அகற்றினர்.

நீலகிரியில் 6 தாலுகாக்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. 

வருவாய்த்துறை, போலீசார், தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து அதிகமாக மழை பெய்யும் இடங்களில் பாதிப்பு ஏற்படுகிறதா என்று கண்காணித்து வருகின்றனர். இதுதவிர மீட்பு குழுக்களில் உள்ள முதல்நிலை பொறுப்பாளர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கூடலூா்

தொடர் மழையால் கூடலூரில் இருந்து தொரப்பள்ளி செல்லும் சாலையில் கரையோரம் உள்ள மூங்கில்கள் சாய்ந்து மின்கம்பிகள் மீது விழுந்தன. இதனால் மின் கம்பிகள் அறுந்து அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த மின் துறையினர் விரைந்து சென்று மூங்கிலை வெட்டி அகற்றி, மின்கம்பிகளை சீரமைத்தனர். இதையடுத்து மின்தடை சரிசெய்யப்பட்து. தொடர்ந்து கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் மழை பெய்தது.

அவலாஞ்சியில் 8 செ.மீட்டர்

நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 8 செ.மீட்டர் மழைபதிவாகியது. நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

ஊட்டி-8.4, நடுவட்டம்-38, கிளன்மார்கன்-33, மசினகுடி-10, குந்தா-22, அவலாஞ்சி-80, எமரால்டு-19, அப்பர்பவானி-65, பாலகொலா-9, கூடலூர்-63, தேவாலா-65, அப்பர் கூடலூர்-61, செருமுள்ளி-25, பாடாந்தொரை- 22, ஓவேலி-18, பந்தலூர்-47, சேரங்கோடு-12 உள்பட மொத்தம் 628.4 மி,மீ மழை பதிவாகி உள்ளது. 

Next Story