கொரோனாவுக்கு 4 பேர் பலி
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா நோய்க்கு 4 பேர் இறந்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 40,341 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 308 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 36,645 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 3,388 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விழுப்புரம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த 42 வயதுடைய நபரும், மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விழுப்புரத்தை சேர்ந்த 60 வயதுடைய முதியவரும், விழுப்புரம் அருகே மணம்பூண்டியை சேர்ந்த 56 வயது நபரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 311 ஆக உயர்ந்துள்ளது.
263 பேருக்கு தொற்று
மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது. இதில் புதிதாக 263 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,604 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 37,118 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 3,175 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 24 ஆயிரத்து 751 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 22 ஆயிரத்து 207 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 182 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயது பெண் உயிரிழந்தார். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 182-ல் இருந்து 183-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 720 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 144 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 751-ல் இருந்து 24 ஆயிரத்து 895-ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story