குன்னூர் அருகே பொதுமக்கள் பயன்படுத்திய சாலை மூடல்
குன்னூர் அருகே பொதுமக்கள் பயன்படுத்திய சாலையை ராணுவத்தினர் மூடினர்.
குன்னூர்,
குன்னூர் அருகே உள்ள கீழ்பாரத்நகர், மேல்பாரத்நகர், கல்குழி ஆகிய குடியிருப்பு பகுதியில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் தங்கள் அத்தியாவசிய பணிக்காக மேல்பாரத் நகரில் இருந்து பேரக்ஸ் செல்லும் சாலையை கடந்த 30 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த சாலையை ராணுவத்துக்கு சொந்தமான இடம் என்று கூறி, குன்னூர் ராணுவத்தினர் முள்வேலி வைத்து அடைத்தனர். இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பணிக்காக 2 கி.மீ. சுற்றி பேரக்ஸ் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன் ஆய்வு செய்தார். தொடர்ந்து இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாரத்நகர், கீழ் பாரத் நகர், கல்குழி ஆகிய பகுதி மக்கள் மேல்பாரத்நகரில் இருந்து பேரக்ஸ் செல்லும் சாலையை நீண்ட கால பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை மாவட்ட கலெக்டரின் அறிவுரைப்படி, ஊராட்சி மூலம் 14-வது நிதி குழு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு சிமெண்டு சாலையாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில் ராணுவத்தினர் திடீரென்று இந்த சாலையை அடைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் இந்த இடத்தை ஆய்வு செய்து சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story