ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் குழுவினர் தீவிர விசாரணை


ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் குழுவினர் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 14 Jun 2021 10:57 PM IST (Updated: 14 Jun 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியின் நிர்வாக சீர்கேடு தொடர்பாக தொடர்ந்து கூறப்பட்டு வரும் புகார்கள் எதிரொலியாக டாக்டர்கள் குழுவினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

ராமநாதபுரம்,ஜூன்.
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியின் நிர்வாக சீர்கேடு தொடர்பாக தொடர்ந்து கூறப்பட்டு வரும் புகார்கள் எதிரொலியாக டாக்டர்கள் குழுவினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
புகார்கள்
ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த ஆஸ்பத்திரியில் நிர்வாகத்தினர் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக நிர்வாக சீர்கேடு குறித்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்காதது, டாக்டர்கள் பணிக்கு முறையாக வராதது, கொரோனா வார்டில் கவனக்குறைவு காரணமாக உயிர்ப்பலி, நோயாளிகளை தங்களின் கிளினிக்கிற்கு வரவழைப்பது போன்ற புகார்கள் எழுந்தது.
 இதுதவிர, ஆஸ்பத்திரியில் உள்ள மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு கடத்தல், கொரோனா பிரிவினர் பெயரில் தனியார் ஒட்டல்களில் ஏராளமான உணவு வாங்கி சொந்த பயன்பாட்டிற்கு கொண்டு செல்வது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கண்டித்து பெரியார் பேரவை உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆய்வு
இந்த நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி மீதான  குற்றச்சாட்டுகள், புகார்கள் குறித்து விசாரிக்க மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் இருந்து நேற்று காலை 2 டாக்டர்கள் வந்தனர். டாக்டர்கள் பார்த்தசாரதி, ராகவன் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்தனர். ஆஸ்பத்திரியில் உள்ள மருந்துகள் இருப்பு, ஆக்சிஜன் இருப்பு, உயர் சிகிச்சை கருவிகளின் இருப்பு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். 
மேலும், ஆஸ்பத்திரி டீன் முதல் கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ அலுவலர், செவிலியர்கள், கீழ்நிலை பணியாளர்கள் வரை அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
கலெக்டர் அலுவலகம்
இந்த விசாரணையில் ஒரு சிலர் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை விசாரணை குழுவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த விசாரணையின் முடிவில் டாக்டர்கள் இருவரும் கலெக்டர் அலுவலகம் சென்று தங்கள் விசாரணை குறித்து தெரிவித்து கூடுதல் விவரங்களை பெற்றனர். இதன்பின்னர் மீண்டும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணையை தொடர்ந்தனர். நாள் முழுவதும் நடத்தப்பட்ட இந்த விசாரணை தொடர்பான அறிக்கையை மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு தெரிவிக்க உள்ளதாக டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர். 
அப்போது ராமநாதபுரம் பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகம்மது யாசின் ஆகியோர் ஆஸ்பத்திரி முறைகேடு தொடர்பாக புகார் மனு அளித்தனர்.

Next Story