திருச்செந்தூர்-பாளையங்கோட்டை இடையே ரூ.435 கோடியில் தொழில் வழிச்சாலை பணி தொடக்கம்


திருச்செந்தூர்-பாளையங்கோட்டை இடையே ரூ.435 கோடியில் தொழில் வழிச்சாலை பணி தொடக்கம்
x
தினத்தந்தி 14 Jun 2021 10:59 PM IST (Updated: 14 Jun 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர்-பாளையங்கோட்டை இடையே ரூ.435 கோடி மதிப்பில் தொழில் வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

திருச்செந்தூர்:
சென்னை-கன்னியாகுமரி இடையே தொழில் வழிச்சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் திருச்செந்தூர்- பாளையங்கோட்டை இடையே ரூ.435 கோடியில் தொழில் வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நேற்று திருச்செந்தூரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தமிழக மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, தொழில் வழிச்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் வளம் பெருக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சென்னை- கன்னியாகுமரி இடையிலான தொழில் வழிச்சாலை திட்டத்தில் திருச்செந்தூரில் இருந்து வி.எம்.சத்திரம் வழியாக பாளையங்கோட்டை வரை 50.5 கி.மீ. தொலைவிலான சாலை ரூ.435 கோடி மதிப்பீட்டிலும், கோபாலசமுத்திரம்- கல்லிடைக்குறிச்சி இடையிலான சாலை ரூ.202 கோடி மதிப்பீட்டிலும் அமைக்கப்படுகிறது. தற்போது 7 மீட்டர் அகலமுள்ள இந்த சாலை 10 மீட்டர் அகலம் கொண்டதாக மாற்றப்படுகிறது. இதில் பாளையங்கோட்டை- திருச்செந்தூர் வரை 2.5 மீட்டர் அகலத்தில் பாதசாரிகள் செல்ல வசதியாக நடைபாதை அமைக்கப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக 2 இடங்களில் ஓய்வு விடுதிகளும் அமைக்கப்படுகிறது. 

இந்த சாலை அமையும்போது தொழில் வளம் பெருகும். தொழில் வழிச்சாலை அமைக்கும் பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவடையும். இப்பகுதியில் இஸ்ரோ போன்ற திட்டங்கள் வர இருக்கிறது. இந்த சாலை அமைப்பதன் மூலம் தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்களை எளிதில் கொண்டு வர முடியும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story