தடைக்காலம் முடிந்தும் மீன்பிடிக்க செல்லாத விசைப்படகு மீனவர்கள்


தடைக்காலம் முடிந்தும் மீன்பிடிக்க செல்லாத விசைப்படகு மீனவர்கள்
x
தினத்தந்தி 14 Jun 2021 11:01 PM IST (Updated: 14 Jun 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று காரணமாக தடைக்காலம் முடிவடைந்தும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

கோட்டைப்பட்டினம், ஜூன்.15-
கொரோனா தொற்று காரணமாக தடைக்காலம் முடிவடைந்தும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
மீன்பிடி தடைக்காலம்
தமிழகம் முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். இவர்கள் விசைப்படகு, நாட்டுப் படகு உள்ளிட்டவற்றின் மூலம் மீன் பிடிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீன் வளத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப்பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம்.அதன்படி, கிழக்கு கடற்கரைப் பகுதிகளான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரையுள்ள பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதனால், கடந்த 2 மாதங்களாக விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
கடலுக்கு செல்லவில்லை
மீனவர்கள் விசைப்படகுகளை பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது, விசைப்படகுகள் தயார்நிலையில் உள்ளன. மீன்பிடி தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து மீனவர்கள் படகுகளை தயார்நிலையில் வைத்திருந்தனர். நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சங்கத்தினர் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர். இதனால் அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
மீன் பிரியர்கள் வருத்தம்
மேலும் வருகிற 30-ந்தேதி முதல் மீன் பிடிக்க செல்லலாம் என ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளனர். இதனால் பழுதுபார்க்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்ட விசைப்படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வகை, வகையான மீன்களை சாப்பிடலாம் என எதிர்பார்த்து இருந்த மீன் பிரியர்களுக்கு மீனவர்களின்  முடிவு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story