கரூரில் பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தம்
பள்ளி கல்வித்துறை அறிவிப்பால் பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் தங்களது பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க வந்த பெற்றோர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
கரூர்
பிளஸ்-1 மாணவர் சேர்க்கை
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி, தனியார் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்டவற்றில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 67 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 40 தனியார் பள்ளிகள் என மொத்தம் 107 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளில் நேற்று பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
வெள்ளியணை
இதில் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையான சிறந்த கட்டமைப்பு வசதி, ஆங்கில வழி நர்சரி வகுப்புகள், கணினி மயமாக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகள், அழகிய புல்வெளி தளங்கள், கண்காணிப்பு கேமரா வசதியுடன் மாணவர்கள் கண்காணிப்பு, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தனித்தனி தமிழ் மற்றும் ஆங்கில வழி வகுப்புகள், அரசு பொது தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சி விகிதம், இதனால் ஒவ்வொரு ஆண்டும் கூடும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை என சிறப்பாக செயல்பட்டு தமிழக அரசால் மாதிரி பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே அரசு பள்ளி ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகும். இந்த பள்ளியில் தற்போது 800-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் பலரும் கரூர், தாந்தோன்றிமலை, காந்திகிராமம், புலியூர் போன்ற நகரபகுதிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் ஆவர். இப்படி சிறப்புகள் பெற்றுள்ள இந்த அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளிலும் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். அதன்படி நேற்று தொடங்கிய பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கையில் முதல் நாளிலேயே 70-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளை பெற்றோர்கள் அழைத்து வந்து ஆர்வமுடன் இந்த பள்ளியில் சேர்த்தனர். மாணவர்கள் சேர்க்கைக்காக பள்ளி வளாகம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் தீனதயாளன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
குளித்தலை
தமிழக அரசு நோய்த்தொற்று அதிகமுள்ள கரூர் மாவட்டம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் தவிர தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பித்தது. இந்தநிலையில் கரூர் மாவட்டம் குளித்தலை கல்வி மாவட்ட பகுதியில் நேற்று பிளஸ்-1 வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. இதையறிந்த பல மாணவ- மாணவிகள் குளித்தலை மற்றும் அய்யர்மலை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்கள் பெற்றோருடன் பிளஸ்-1 வகுப்பில் சேர்வதற்காக நேற்று காலை வந்திருந்தனர். இப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் முதலில் வழங்கப்பட்டது. இதில் ஒரு பள்ளியில் மட்டும் 5 மாணவர்கள் பிளஸ்-1 வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் மற்ற 2 பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மட்டும் வழங்கப்பட்டன. இந்தநிலையில் ஊரடங்கு தளர்வு படுத்தப்படாத மாவட்டங்களில் ஒன்றான கரூர் மாவட்டத்தில் மறு அறிவிப்பு வரும் வரை பிளஸ்-1 வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை செய்ய வேண்டாமென பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக வந்த பெற்றோரும் பள்ளியில் சேர வந்த மாணவர்களும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்
நொய்யல்
புகழூர் அரசு மேல்நிலைப்பள்ளி, புன்னம்பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப்பள்ளி, நொய்யல் பகுதியில் உள்ள பெரியார் ஈ.வே.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மேல்நிலைப்பள்ளிகளிலும் அரசு ஆரம்ப மற்றும் தொடக்கப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் சேர்க்கைக்காக அமர்ந்திருந்தனர். இந்நிலையில் சில பள்ளிகளில் குறைந்த அளவு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. ஆனால் நொய்யல் பெரியார் ஈ.வே.ரா. அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை சேர்க்கைக்காக அமர்ந்திருந்தும் ஒரு மாணவ- மாணவிகள் கூட வந்து சேரவில்லை. இதனால் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் சோகத்துடன் இருந்தனர். இந்நிலையில் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் எதிர்பார்த்த அதிக அளவு மாணவ- மாணவிகள் சேர்க்கை நடைபெறவில்லை.
தோகைமலை
தோகமலையை சுற்றி உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கடைபிடித்து கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story