மீன்பிடி தடைக்காலம் முடிந்தது: விசைப்படகுகள் சுழற்சி முறையில் கடலுக்கு செல்ல முடிவு
தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் முடிந்ததை தொடர்ந்து விசைப்படகுகள் சுழற்சி முறையில் கடலுக்கு செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், தருவைகுளம், வேம்பார் ஆகிய பகுதிகளில் 420 விசைப்படகுகள் கடந்த 61 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளில் ஏற்பட்டு உள்ள சிறு, சிறு பழுதுகளை சரி செய்தல், சேதம் அடைந்த வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை முதல் கடலுக்கு சென்றனர்.
கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர் தலைமை தாங்கினார். தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் விஜயராகவன், வயோலா மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மொத்தம் உள்ள 240 விசைப்படகுகளை 2 ஆக பிரித்து 120 படகுகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும், மீதமுள்ள 120 படகுகள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களிலும் சுழற்சி முறையில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படும். குறைந்த எண்ணிக்கையிலான மொத்த வியாபாரிகள் மட்டுமே மீன்களை வாங்க மீன்பிடி துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீன்களை வாங்கிட அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மீன்பிடி துறைமுகத்துக்குள் வரும் வாகனங்கள், துறைமுக அலுவலகம் வழியாக வந்து மெயின் கேட் வழியாக வெளியில் செல்ல வேண்டும். கேட் நுழைவு வாயிலில் படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மீன்வளத்துறை மூலம் நுழைவு அட்டை வழங்கப்படும். பிடித்து வரும் மீன்கள் அன்று இரவே சமூக இடைவெளியை கடைபிடித்து விற்பனை செய்யப்படும்.
மீன்பிடி துறைமுகத்துக்கு வரும் விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், ஏலம் விடுவோர், ஐஸ் கொண்டு வருவோர் என அனைவரும் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தல் போன்ற கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மீன்பிடி துறைமுகத்துக்குள் வரும் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். மாலை 6 மணிக்குள் அனைத்து விசைப்படகுகளிலும் பனிக்கட்டி மற்றும் அத்தியாவசிய பொருட்களை படகுகளில் ஏற்றி விட வேண்டும்.
இதனை போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைத்து தீவிரமாக கண்காணிப்பார்கள். மீன்களை வகை பிரித்து தனித்தனி இடத்தில் வைத்து விற்பனை செய்ய வேண்டும். மீன்பிடி துறைமுகத்துக்கு வரும் படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள், மீன் ஏலமிடுவோர், வியாபாரிகள் என அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தி கொரோனா தடுப்பூசி போடப்படும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று மீன்பிடி துறைமுகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் சுமார் 50 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
Related Tags :
Next Story