ஊரடங்கில் தளர்வு: கரூரில் டாக்சிகள்- ஆட்டோக்கள் ஓடின
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கரூரில் டாக்சிகள், ஆட்டோக்கள் ஓடின. மேலும் கடைகள், நிறுவனங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டன.
கரூர்
ஊரடங்கு
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு 30-6-2021 வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஊரடங்கு 14-ந் தேதியன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த்தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த்தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 14-ந் தேதி (அதாவது நேற்று) முதல் வருகிற 21-ந் தேதி காலை 6 மணி வரை, மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டது.
அனுமதி
மேலும் இந்த ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஊரடங்கின்போது, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும், கரூர் உள்பட 11 மாவட்டங்களில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன.
இதனை கருத்தில் கொண்டும், அதேசமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், இந்த 11 மாவட்டங்களில் கூடுதலாக அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் 14-ந் தேதி (அதாவது நேற்று) முதல் அனுமதி அளிக்கப்பட்டது.
இ-பதிவுடன் அனுமதி
அதன்படி தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கப்பட்டது. மேலும், எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி மற்றும் எந்திரங்கள் பழுதுநீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவரின் வீடுகளுக்கு சென்று பழுதுநீக்கம் செய்ய காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்பட்டது. இந்த வகை கடைகளை திறக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) கரூர் லைட்ஹவுஸ், தாந்தோணிமலை, காந்திகிராமம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட்டன.
25 சதவீதம் பணியாளர்களுடன்.
வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்பட்டது. மேலும், வாடகை டாக்சிகளில், ஓட்டுனர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டது. மேலும் வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது. கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட்டன.
மண்பாண்டம் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது. கரூர் மாவட்டத்தில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவீதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட்டன.
Related Tags :
Next Story