டாஸ்மாக் கடைகளில் மாயமான சமூக இடைவெளி
ஒரு மாதத்திற்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் ஏராளமான மதுபிரியர்கள் குவிந்ததால் சமூக இடைவெளி மாயமானது.
ராமேசுவரம்,ஜூன்.
ஒரு மாதத்திற்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் ஏராளமான மதுபிரியர்கள் குவிந்ததால் சமூக இடைவெளி மாயமானது.
திறப்பு
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 121 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுபிரியர்கள் உற்சாகத்துடன் வந்து மதுபானங்களை வாங்கி சென்றனர். பல்வேறு கடைகளில் மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கி முத்தமிட்டு மகிழ்ச்சியுடன் சென்றனர். இளைஞர்கள், முதியவர்கள் மதுபானங்களை வாங்கி உற்சாகமாக ஆடிக்கொண்டே சென்றதை காணமுடிந்தது. மதுபானங்கள் குடிக்க முடியாமல் அவதி அடைந்ததாகவும் தற்போது மதுக்கடைகளை அரசு திறந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் மதுபிரியர்கள் தெரிவித்தனர். இதுதவிர, அதிகம்பேர் கூடும் வகையிலான முக்கிய மதுக்கடைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சில கடைகளில் மதுபிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்துச் சென்றதால் போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
பாம்பன்
ராமேசுவரம் அருகே பாம்பன் பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன. கடை திறக்கப்படுவதற்கு முன்பே ஏராளமான மதுப்பிரியர்கள் கடை முன்பு நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வில்லை. பகல் ஒரு மணியுடன் மதுபாட்டில்கள் முழுமையாக காலியானதால் டாஸ்மாக் கடை பணியாளர்கள் மதுபாட்டில்கள் காலியாகி விட்டது எனவும் சரக்கு வந்த பின்னர் அனைவரும் கடைக்கு முன்பு வாருங்கள் எனவும் மைக் மூலம் தெரிவித்தனர்.
ஆனால் கடை முன்பு கூடியிருந்த மதுப்பிரியர்கள் அங்கிருந்து செல்லாமல் கூட்டமாக சமூக இடைவெளியை மறந்து மிக நெருக்கமாக நின்றபடியே மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் நர்மதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அங்குசாமி, ரவி உள்ளிட்ட போலீசார் கடை முன்பு கூடியிருந்த மதுபிரியர்களை அங்கிருந்து உடனடியாக செல்லுமாறு எச்சரிக்கை செய்து விரட்டினர். அதன்பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மீண்டும் மாலை 4 மணிக்கு மதுபாட்டில்கள் வந்த பின்னர் அங்கு மது விற்பனை மீண்டும் தொடங்கப்பட்டது.
Related Tags :
Next Story