கொரோனா ஊரடங்கு:சிங்கம்புணரியில் மலைபோல் குவிந்து கிடக்கும் கயிறுகள்


கொரோனா ஊரடங்கு:சிங்கம்புணரியில் மலைபோல் குவிந்து கிடக்கும் கயிறுகள்
x
தினத்தந்தி 14 Jun 2021 11:38 PM IST (Updated: 14 Jun 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு காரணமாக சிங்கம்புணரியில் விற்பனையாகாமல் மலைபோல் கயிறுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

சிங்கம்புணரி,

கொரோனா ஊரடங்கு காரணமாக சிங்கம்புணரியில் விற்பனையாகாமல் மலைபோல் கயிறுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

கயிறு உற்பத்தி

 சிங்கம்புணரி பகுதியில் கயிறு உற்பத்தி மிகவும் பிரபலம் பெற்றது. தென்னை மரங்கள் அதிகம் நிறைந்த கிராமங்கள் சூழ்ந்த சிங்கம்புணரி பகுதியில் அதனைச் சார்ந்த கயிறு உற்பத்தி தொழில் பல ஆண்டுகளாக  நடைபெற்று வருகிறது. தென்னை மரத்திலிருந்து தேங்காயை வெட்டி எடுத்து தேங்காய் நாரிலிருந்து தயாரிக்கப்படுவது மஞ்சிக்கயிறு. இப்பகுதியில் தென்னை நார் கயிறு திரிக்கும் தொழிலில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு அன்றாட தினக்கூலி தான் வழங்கப்படுகிறது.
சிங்கம்புணரியை சுற்றியுள்ள கிராமங்களில் குறிப்பாக வேங்கை பட்டி, கோயில்பட்டி, மணப்பட்டி, அரசினம்பட்டி, பிரான்மலை, முட்டாக்கட்டி, ஒட்டுவன்பட்டி, கண்ணமங்கலபட்டி, கோட்டை வேங்கைப்பட்டி, செருதப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் குடிசைத் தொழிலாக கயிறு திரிக்கும் தொழில் நடக்கிறது. இங்கு தயாராகும் கயிறுகள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்திலுள்ள கோவை, சென்னை போன்ற பெருநகரங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் கயிறுகள் கோவில் திருத்தேருக்கு வடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த கயிறு திரிக்கும் தொழிலில் பெண்களுக்கு தினக்கூலி ரூ.200 வழங்கப்படுகிறது.

மலை போல குவிந்து கிடக்கிறது

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு காரணமாக கயிறு திரிக்கும் தொழில் முடங்கியது. அதை தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் தொழில் நடைபெற தொடங்கியது. இந்த நிலையில் தற்போது கொரோனா 2-வது அலை ஊரடங்கு கயிறு திரிக்கும் தொழிலை மிகவும் நசித்து விட்டது. ஏற்கனவே தயார் செய்யப்பட்ட கயிறுகள் மலை போல குவித்து வைக்கப்பட்டு உள்ளது.
திருவிழாக்கள், கட்டிட வேலைகள், விவசாய வேலைகள் சரிவர நடைபெறாததாலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருப்பதாலும் கயிறுகள் விற்பனை ஆகாமல் குவிந்து கிடக்கின்றன. இதனால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர். கயிறு உற்பத்தியாளர்கள் தாங்கள் தென்னை மட்டை வாங்கியதற்கு செலுத்த வேண்டிய தொகையையும், வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு கூலி தொகை கொடுக்க முடியாமலும் சிரமத்தில் உள்ளனர்.
தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஒரு சில இடங்களில் ஏற்கனவே வாங்கிய தென்னை மட்டைகளில் இருந்து கயிறு திரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

வாரியத்தில் சேர்க்க வேண்டும்

இது குறித்து கயிறு உற்பத்தியாளர் சீனிவாசன் கூறியதாவது:-
2 தலைமுறைகளாக இந்த தொழில் செய்து வருகிறோம். எங்களுக்கு இந்த தொழில் செய்வதை தவிர வேறு ெதாழில் தெரியாது. கடந்த ஊரடங்கிலும் பாதிக்கப்பட்டோம். ஊரடங்கு தளர்வில் மீண்டும் தொழில் செய்து முன்னேறி விடலாம் என நினைத்தோம். ஆனால் கொரோனா 2-வது அலை ஊரடங்கு என்னை போன்ற தொழில் செய்பவர்களை முடக்கி போட்டு விட்டது. எனவே அரசு எங்களுக்கு அமைப்பு சாரா ெதாழில் வாரியத்தில் சேர்த்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story